ஜனாதிபதி திரெளபதி முர்மு தமிழகம் வருகை! பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து பாராட்டு
சென்னை: ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று தமிழகம் வருகை தந்தார். தெப்பக்காடு யானைகள் முகாம் சென்ற ஜனாதிபதி ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று 3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். இந்த வேளையில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அதன்படி டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் இன்று காலை 11 மணியளவில் திரெளபதி முர்மு புறப்பட்டார். டெல்லியில் இருந்து அவர் கர்நாடகா மாநிலம் மைசூர் விமான நிலையத்துக்கு வந்தார். மைசூர் விமான நிலையத்துக்கு மதியம் 3 மணியளவில் வந்த திரெளபதி முர்மு அங்கிருந்து ஹெலிகாப்டரில் தமிழ்நாடு புறப்பட்டார்

தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் சரணாலயத்துக்கு பிற்பகல் 3.30 மணிக்கு திரெளபதி முர்மு வருகை தந்தார் அதன்பிறகு அவர் முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, அதன்பிறகு யானை பாகன்களுடன் கலந்துரையாடடினார். தொடர்ந்து ‛ஆஸ்கர்' வென்ற எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன்- பெள்ளியை அவர் சந்தித்து பாராட்டினார்.
அதன்பிறகு மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டரில் மைசூரூ புறப்பட்டு சென்றார். அதன்பிறகு மைசூரில் இருந்து விமானத்தில் சென்னை வருகிறார். இரவு 7 மணிக்கு சென்னை வரும் ஜனாதிபதி திரெளபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவி உள்ளிட்டவர்கள் வரவேற்கின்றனர். அதன்பிறகு ஆளுநர் மாளிகையில் அவர் ஓய்வு எடுக்கிறார்.
இதையடுத்து நாளை காலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.
அதன்பிறகு ஆளுநர் மாளிகை செல்லும் அவர் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். பிறகு நாளை மதியம் 3.30 மணியளவில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரதிநிதிகளின் கலந்துரையாடல் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடக்குமு் பாரதியார் படத் திறப்பு விழாவில் பங்கேற்று தர்பார் அரங்கத்திற்கு பாரதியார் பெயரை சூட்ட உள்ளார்.
இரவு 8 மணிக்கு ஆளுநர் ஆர்என் ரவி விருந்து அளிக்கிறார். இதிலும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பிறகு இரவில் ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். பிறகு திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்லும் அவர் ஹெலிகாப்டரில் புதுச்சேரி புறப்படுகிறார். அங்கு புதுச்சேரி ஜவஹர்லால் முதுகலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் லீனியர் ஆக்சிலரேட்டர் உபகரணத்தை தொடங்கி வைக்கிறார்.
அதோடு தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் வில்லியனூரில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையையும் திறந்து வைக்கிறார். இதன்பின்பு புதுச்சேரி அரசு சார்பில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இரவில் அங்கு தங்கும் ஜனாதிபதி திரெளபதி முர்மு மறுநாளான செவ்வாய்க்கிழமை ஆரோவில்லில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிட்டு அங்கு நடைபெற இருக்கும் மாநாட்டையும் தொடங்கி வைத்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.












Click it and Unblock the Notifications