ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா- மெரினா சாலையில் நினைவு வளைவு!
சென்னை: தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற உள்ளது; மேலும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் சட்டசபை நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆராய்ந்து வருவதாகவும் கோட்டை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். சட்டசபை நூற்றாண்டு விழாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடத்தவும் முடிவு செய்து, அவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அண்மையில் டெல்லி சென்று சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கருணாநிதி படத் திறப்பு
அப்போது சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை திறந்து வைப்பது, மதுரையில் அமைய விருக்கும் கலைஞர் நூலகத்திற்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட சில முக்கிய நிகழ்வுகளையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை வைத்தே நடத்தவும் முதல்வர் ஸ்டாலின் தீர்மானித்து தெரிவித்திருந்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் இதற்கு ஒப்புக் கொண்டார்.

நூற்றாண்டு வளைவு எங்கு?
இருப்பினும் இந்த நிகழ்ச்சிகளை எப்போது நடத்துவது என்பது இன்னும் முடிவாகாமல் இருக்கிறது. இதனிடையே சட்டசபை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு , நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அந்த நினைவு வளைவை சென்னை காமராஜர் கடற்கரை சாலையில் (மெரினா கடற்கரை சாலை ) அமைக்கலாம் என்றும், அதனை எந்த இடத்தில் அமைப்பது என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னை மெரினா சாலை
மேலும், கடற்கரை சாலையில் நினைவு வளைவு அமைப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்குகள் இருக்கிறதா? இருந்தால் அதன் தற்போதைய நிலை என்ன ? என்பது குறித்தெல்லாம் கவனமாக ஆராய்ந்து வருகிறதாம் திமுக அரசு.

சென்னை மாகாண முதல்வர்கள்
இதனிடையே தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவுக்கு அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இடம்பெற்றிருந்த மாநிலங்களான ஒடிஷா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகியவற்றின் முதல்வர்களையும் அழைக்க வேண்டும் என்கிற குரல்களும் வந்துள்ளன. ஒடிஷாவில் உள்ள கோராபுட் மாவட்டமும் சென்னை மாகாணத்தில்தான் இருந்தது. இது குறித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

1921-ல் முதல் சென்னை மாகாண சட்டசபை
தமிழக சட்டசபை அதாவது சென்னை மாகாண சட்டசபையானது 1921-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது சென்னை மாகாண சட்டசபையில் 132 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களில் 34 பேர் ஆளுநரால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள். சென்னை மாகாண முதல் சட்டசபைக் கூட்டம் 1921-ம் ஆண்டு ஜனவரி 9-ல் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் நடைபெற்றது என்பது வரலாறு.












Click it and Unblock the Notifications