41 பேரை கொன்ற விஜய்.. சர்ச்சில் சர்ச்சையாக பேசிய பாதிரியார்! அங்கேயே ரவுண்ட் கட்டிய தவெக தம்பிகள்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் சிறுபான்மையினர் வாக்குகளை கவர நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. திமுகவும் நெல்லையில் பிரமாண்டமாக கிறிஸ்துமஸ் விழாவில் நடத்தியது. இதேபோல விஜயும் நேற்று கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியிருந்தார்.
இந்த நிலையில் 'விஜய் பின்னால் செல்லாதீர்கள்' என தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களை ட்ரெண்டாகி வருகிறது. அதே நேரத்தில் தேவாலயத்தில் அரசியல் பேசுவதா? என அந்த பாதிரியாருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்ற தமிழக வெற்றிக் கழகத்தினர்.
கடந்த சட்டமன்றத் தேர்தல்களை போல 2026 சட்டமன்ற தேர்தல் எந்த கட்சிக்கும் அவ்வளவு எளிதாக இருக்காது என சொல்லப்படுகிறது. காரணம் விஜய் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பார் என்பது இயலாத காரியம் என்பது விஜய்க்கே தெரியும்.

2026 சட்டமன்ற தேர்தல்
ஆனால் திமுக எதிர்ப்பு வாக்குகள், சிறுபான்மையின வாக்குகள், பெண்கள், முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகளை விஜய் பெருமளவில் அறுவடை செய்வார் என சொல்லப்படுகிறது. தற்போதைய சூழலில் விஜய்க்கு 20% வரை வாக்கு இருக்கலாம் என பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கிறிஸ்துமஸ் விழா கவனம் பெற்று இருக்கிறது.
மு.க.ஸ்டாலின்
மிகப் பிரமாண்டமாக நெல்லையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறுபான்மையின் பாதுகாவலன் திமுக தான் என உரக்க பேசினார். தை பின்பற்றி விஜயும் நேற்று மாமல்லபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார். இதில் பேராயர்கள், இறைமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது சிறுபான்மையினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என விஜய் உறுதி அளித்தார்.
விஜய் கிறிஸ்துமஸ் விழா
விஜயை பொருத்தவரை சிறுபான்மையினர் குறிப்பாக கிறிஸ்துவ வாக்குகளை அதிகம் பிரிப்பர் என சொல்லப்படுகிறது. மேலும் திருச்சி கிழக்கு, நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் விஜய் களமிறங்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஜயின் பேச்சை கேட்டு அவர் பின்னால் செல்லாதீர்கள் என பாதிரியார் ஒருவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
பாதிரியார் விஜய் பேச்சு
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டணத்தில் உள்ள தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு திருப்பதியில் திருநெல்வேலி செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி முதல்வரும் பாதிரியாருமான காட்வின் ரூபஸ் பிரசங்கத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்," பிற பிள்ளைகள் படிக்கச் செல்லும் போது நாம் பிள்ளைகள் விஜய் ரசிகர்களாக இருக்கிறார்கள். 41 பேரை கொன்று குவித்தவனுக்கு கையில் விலங்கிட்டது போல கைகாட்டும் தலைவரான விஜய் பின்னால் செல்லும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
சினிமா நடிகர் விஜய்
நான் விஜய்க்கு எதிரியல்ல ஆனாலும் நமது இளைஞர்கள் குழந்தைகள் எல்லாம் சினிமா நடிகர் பின்னால் ஏன் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதை அனைவரும் கேட்க வேண்டும். பாரம்பரியம் என்பது இன்று நேற்றோடு முடிந்து விடுவது கிடையாது. அது தொடர்ந்து கொண்டே இருக்கும்" என பேசி இருந்தார்.
சிறுபான்மை அரசியல்
அப்போது அங்கிருந்த விஜய் ரசிகர்களும் பொதுமக்கள் சிலரும் பாதிரியாரின் பேச்சு தொடர்பாக அந்த தேவாலயத்தின் பாதிரியாரான அலோசியஸ் இடம் புகார் தெரிவித்தனர். மேலும் தேவாலயத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் எனவும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து காட்வின் ரூபஸ் வீடியோ வெளியிட வேண்டும் என இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணையில் இருக்கும் போது மக்கள் மத்தியில் அவதூறு பரப்புவது போல உள்நோக்கத்துடன் பாதிரியார் பேசியிருப்பது கிரிமினல் குற்றம் எனவும், பாதிரியார் என்ற போர்வையில் அவர் திமுகவின் தொண்டர் போல நடந்து கொள்வதாக விமர்சித்து வருகின்றனர் தவெகவினர்.












Click it and Unblock the Notifications