ரூ.100 கோடி அளவில் சிறைத்துறை ஊழல்? உரிய ஆதாரத்துடன் வரவும்: மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கடந்த அதிமுக ஆட்சியின்போது மதுரை மத்திய சிறையில் நூறு கோடி ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுநல வழக்கு தொடர போதிய ஆதாரங்கள் வேண்டும் உரிய ஆதாரங்களுடன் புதிய மனுவை தாக்கல் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

பொது நல வழக்கு
கடந்த அதிமுக ஆட்சியின்போது மதுரை மத்திய சிறையில் நூறு கோடி அளவில் ஊழல் நடைபெற்றதாக கூறி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குனருமான பி.புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், "மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதிகளால் மருத்துவ பொருட்கள், ஸ்டேஷ்னரி பொருட்கள் தயாரிக்கப்பட்டு அவை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாக போலி கணக்கு தயாரித்து ஊழல் செய்துள்ளனர்.

5 ஆண்டுகளில் ரூ.100 கோடி அளவில் ஊழல்
கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம்வரை நடைபெற்ற இந்த ஊழலில் சுமார் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதற்கான ஆதாரங்கள் பெற்றுள்ளோம்" எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

போலி கணக்குகள் மூலம் முறைகேடு
மேலும் அவரது மனுவில் அதிகமாக உற்பத்தி செய்ததாக, சிறைக்கைதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாக போலி கணக்கு காண்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். குறைந்த அளவே உற்பத்தி செய்து அதிக உற்பத்தி செய்தது போல் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் அப்போதைய சிறைத்துறை கண்காணிப்பாளர், மற்றும் டிஐஜிகளுக்கு தொடர்பு உள்ளது என புகார் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கு
இந்த ஊழல் தொடர்பாக உள்துறைச்செயலாளர், சிறைத்துறை டிஜிபிக்கு புகார் அனுப்பி எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி,நீதிபதி பி.டி. ஆதிகேசவலு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

உரிய ஆதாரங்களுடன் மனுவை தாக்கல் செய்ய உத்தரவு
அப்போது மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, "ஊழல் தொடர்பாக தணிக்கை அறிக்கை உள்ளோம், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், புகாரில் என்ன அடிப்படை உள்ளது, உரிய ஆதாரங்கள், ஆவணங்கள் இல்லை என தெரிவித்தனர். இந்த மனுவை திரும்ப பெற்று உரிய ஆதாரங்களுடன் புதிய மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்தனர்.












Click it and Unblock the Notifications