தீபாவளிக்கு தனியார் ரயில்? அதுவும் தமிழகத்தில்.. டிக்கெட் முன்பதிவும் தொடங்கிடுச்சாமே! என்ன மேட்டர்
சென்னை: தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், திடீரென தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாகத் தனியார் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்போர் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றே தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

ரயில் டிக்கெட்கள் 120 நாட்களுக்கு முன்பே ஓபன் ஆகும் நிலையில், ஒரு பகுதியின் முன்கூட்டியே அதில் புக் செய்துவிடுவார்கள். அதில் கிடைக்காதவர்கள், பேருந்துகள் பக்கம் திரும்புவார்கள். இருப்பினும் பேருந்து கட்டணம் அதிகமாக இருப்பது பலருக்கும் பிரச்சினைதான்.
தனியார் ரயில்: இப்படி தீபாவளி சமயத்தில் ஊருக்குச் செல்ல அனைவரும் டிக்கெட்டிற்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 9 முதல் 13 வரை மூன்று நாட்களுக்கு பிரீமியம் கட்டணத்தில் இயக்கப் போவதாகத் தனியார் நிறுவனம் ஒன்று விளம்பரம் கொடுத்துள்ளது.
சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி வழியாகத் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் ஆகிய நகரங்களுக்கு நவம்பர் 9 முதல் 13 வரை 6 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக அந்த நிறுவனம் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த பயணங்களுக்கான டிக்கெட் கட்டணத்தையும் அறிவித்துள்ள அந்த தனியார் நிறுவனம் முன்பதிவையும் தொடங்கியுள்ளது. இதுவே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ரூட்: இது உண்மைதானா இல்லை பொய்யா என்று பலருக்கும் முதலில் புரியவில்லை. இது குறித்து தென்னக ரயில்வே வட்டாரத்தில் விசாரிக்கும் போது, அந்த தனியார் நிறுவனம் சிறப்பு ரயில்களை இயக்க கோரிக்கை விடுத்திருப்பது உண்மைதான் எனக் கூறும் அதிகாரிகள், அதேநேரம் அதற்கு ரயில்வே இன்னும் அனுமதி தரவில்லை என்று கூறுகிறார்கள். இருப்பினும், அந்த நிறுவனம் தங்களுக்கு விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என்று கூறுகிறது.
அந்த விளம்பரத்தின்படி நவம்பர் 9, 10, 11 தேதிகளில் சென்னையில் இருந்து திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் ஆகிய இடங்களுக்குச் செல்ல டிக்கெட் புக் செய்யலாம். அதேபோல மறு மார்க்கமாக நவம்பர் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, நாகர்கோவில், விருதுநகர், மதுரை, திருச்சி வழியாக ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
உண்மை என்ன: இருப்பினும், ரயில் டிக்கெட் கட்டணம் ரொம்பவே அதிகமாக இருப்பதாகப் பயணிகள் பலரும் அதிருப்தி தெரிவித்த நிலையில், நேற்று மாலை டிக்கெட் புக்கிங் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாகப் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அந்த நிறுவனம் தரப்பில் கூறுகையில், "சென்னை மற்றும் திருவனந்தபுரம் இடையேயான ரயில் நிச்சயம் இயக்கப்படும். இதற்கான அனுமதி கிடைக்கும். அதன் பிறகு இன்று திங்கள் மாலை அல்லது இரவு புக்கிங் மீண்டும் ஆரம்பிக்கும்" என்றார்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "திருவிழா காலங்களில் பொதுமக்களிடம் தேவை அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாகத் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. எனவே, அதுபோன்ற நேரத்தில் தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். ஆனால், இந்த சிறப்பு ரயில்களைத் தனியார் தனியார் ஆபரேட்டர் இயக்க அனுமதிப்பதை ஏற்று முடியாதது.
கட்டணம் அதிகம்: சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு 3ஏசி பெர்த்துக்கு ரூ.2,000, 2ஏசிக்கு ரூ.3,000 எனத் தனியார் நிறுவனம் கட்டணம் வசூலிக்கிறது. இந்தக் கட்டணத்தைக் கொடுத்து சாதாரண மக்களால் பயணிக்க முடியாது. எனவே, குறைந்த விலையில் ரயில்களை இயக்க தென்னக ரயில்வே அனுமதிக்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.
இதில் விஷயம் என்னவென்றால் இப்போது சென்னையில் இருந்து ரயில்களை இயக்க தனியார் ரயில் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதற்குள் அந்த நிறுவனம் இதற்கான விளம்பரத்தை வெளியிட்டு, டிக்கெட் புக்கிங்கை தொடங்கியதே சர்ச்சைக்குக் காரணமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications