வரலாறு காணாத சரிவில் இந்திய ரூபாய்! இனி இந்த 3 பிரிவினரின் சம்பளம் மட்டும்தான் உயருமாம்!
சென்னை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்திருக்கிறது. இதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் என சொல்லப்படுகிற அதே நேரத்தில், குறிப்பிட்ட தொழில் பிரிவில் உள்ளவர்களின் சம்பளம் மட்டும்தான் இதன் மூலம் உயரும் என்றும் சொல்லப்படுகிறது.
இன்றைய தேதியில் ஒரு அமெரிக்க டாலரை வாங்க வேண்டும் எனில் நாம் 86.20 ரூபாயை கொடுக்க வேண்டும். கடந்த 2014ம் ஆண்டு டாலரின் விலை ரூ.58.58 என இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

ரூபாயின் மதிப்பு சரிவு என்றால் என்ன?:
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாடும் தங்கள் நாடுகளுக்கு என சொந்தமாக பணத்தை வைத்திருக்கின்றன. இந்த பணத்தை கொண்டு வெளிநாடுகளில் பொருட்களை வாங்க முடியாது. உதாரணத்திற்கு இந்தியாவுக்கு பெட்ரோல் வேண்டும் எனில், அதை அரபு நாடுகளிடம் வாங்கலாம். ஆனால் அந்த நாடுகள் இந்திய கரன்சியை வாங்க மாட்டார்கள். பதிலுக்கு அமெரிக்க டாலர்தான் வேண்டும் என்று கேட்பார்கள்.
ஆஸ்திரேலியாவிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்கிறோம். அங்கேயும் இதே பஞ்சாயத்துதான். ஆக இறக்குமதி அதிகரிக்க, அதிகரிக்க டாலரின் மவுசு உயரும். மறுபுறம் இந்திய ரூபாயின் மதிப்பு தானாகவே சரியும்.
என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?:
ரூபாய் மதிப்பு சரிவதால், இந்தியாவில் இறக்குமதி செய்ய அதிக விலையை கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். பெட்ரோல், நிலக்கரி, உலோகங்கள், கனிமங்கள் உள்ளிட்டவற்றுக்கு அதிக பணம் செலவானால், அது மொத்தமும் நம்முடைய தலையில்தான் வந்து விடியும். உதாரணத்திற்கு பெட்ரோல் விலை உயர்கிறது எனில், பைக், கார் வைத்திருப்பவர்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியது வரும். அதேபோல, பேருந்து, விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்தின் கட்டணம் உயரும்.
நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் எனில், உங்களுக்கு தேவையான காய்கறிகள் லாரிகளில்தான் வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயரும்போது தானாகவே இதன் வாடகை கூலியும் உயரும். கூலி உயர்வு, காய்கறி விலை உயர்வாக எதிரொலிக்கும். எனவே நம்மை போன்ற சாமானிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
யாருக்கெல்லாம் சாதகம்?:
ரூபாயின் சரிவு பல வகைகளில் இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், தகவல் தொழில்நுட்பம், ஜவுளி மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு இது சாதகமாகவே அமையும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்பதுறையில் பணியாற்றுபவர்கள் அமெரிக்க டாலரில் ஊதியம் பெறுகிறார்கள். ஜவுளி மற்றும் உற்பதி துறையில் தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம், அவர்களுக்கான பணமும் டாலரில் கிடைக்கிறது.
ஆக டாலரின் மதிப்பு உயர்வதன் மூலம் தானாகவே இவர்கள் பெறும் ஊதியத்தின் மதிப்பும் உயரும். அதாவது இவர்கள் எப்போதும் வாங்கும் டாலரைதான் வாங்குவார்கள். ஆனால் அதை இந்திய பணமாக மாற்றும்போது அதன் மதிப்பு உயரும்.
வேலைவாய்ப்பில் தாக்கம்:
இருந்தாலும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து, இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்போது, இந்தியாவில் புதிய முதலீடுகள் தவிர்க்கப்படுகிறது. முதலீடுகள்தான் வேலை வாய்ப்பை உற்பத்தி செய்கின்றன. முதலீடுகள் குறையும்போது தானாக வேலை வாய்ப்புகள் அடிவாங்கும். இதனால் உழைப்பு சக்திக்கு டிமான்ட் குறையும். எனவே, இந்தியர்களின் சம்பளம் பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்பு இல்லை என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications