கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை திறக்கும் முன்பே.. தாம்பரத்தில் இப்படி செய்யலாமா.. மக்கள் எதிர்ப்பு
சென்னை: தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தென் மாவட்ட அரசு பஸ்கள் இன்று முதல் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படியே கிளாம்பாக்கம் வரை தான் வெளியூர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.குறைந்த பட்சம் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கும் வரையிலாவது பேருந்துகளை தாம்பரம் வரை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பாரிஸ் கார்னரில் இருந்து 36 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் ஓராண்டுக்கு முன்பு புதிதாக திறக்கப்பட்டது. இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. மேலும் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்களும் கிளாம்பாக்கம் வரையே இயக்கப்படுகின்றன.

எனினும் சில தென்மாவட்ட பேருந்துகள் தாம்பரம் வரையிலும், சில பேருந்துகள் அடையாறு வரையிலும் இயக்கப்பட்டு வருகின்றன.. என்ன தான் பேருந்து நிலையத்தை கிளாம்பாக்கத்திற்கு மாற்றிய போதிலும், போக்குவரத்து நெரிசல் என்பது ஜிஎஸ்டி சாலையில் குறையவே இல்லை.. குறிப்பாக தாம்பரம் பகுதியில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீஸ் துறை பரிந்துரைகளை வழங்கியிருந்தது.
அதன்படி, தென்மாவட்டங்களில் இருந்து திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் இன்று முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல தற்போது 80 வழித்தடங்களில் 589 பஸ்கள் 3 ஆயிரத்து 795 பயண நடைகள் இயக்கப்படுகிறது. இவற்றுடன் கூடுதலாக 104 பஸ்கள் 816 பயண நடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வடசென்னை பகுதி மக்கள் தங்கள் வருத்தங்களை தெரிவித்துள்ளனர். தென்மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் வழக்கம் போல், கோயம்பேடு, தாம்பரம் வரை வந்து சென்றால் தான் தங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று வடசென்னைவாசி ஒருவர் தெரிவித்தார். தாம்பரம் வரை வரும் போது,எளிதாக வேறு பேருந்தில் ஏறி செல்ல முடியும். அல்லது ரயிலில் ஏறி எளிதான பீச் ஸ்டேசன் சென்றுவிட முடியும். ஆனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலேயே நிறுத்துவதால் நாங்கள் குழந்தைகள், பைகளுடன் பரிதவிக்கும் நிலை ஏற்படும். அத்துடன் நிதி சுமையும், அலைச்சலும் எங்களுக்கு அதிகமாக ஏற்படும் என்றார்.
இதேபோல் இன்னொரு பயணி கூறும் போது, கிளாம்பாக்கம் பகுதியில் இருந்து இரவு நேரங்களில் மந்தைவெளி,மயிலாப்பூர் பகுதிகளுக்கு செல்ல இருந்து அதிகப்படியான பேருந்து வசதிகள் இல்லை.. தாம்பரம் வந்து தான் செல்கிறோம். தென் மாவட்டங்களில் இருந்து வரும் ஒரு சில பஸ்களையும் கிளாம்பாக்கத்தோடு நிறுத்துவதால், குழந்தைகள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் இரவு நேரங்களில் தவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று குற்றம்சாட்டினார்.
தற்போதைய நிலையில், தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஏற்படும் சிக்கலுக்கு, அங்கு வாகனங்களை நிறுத்தி பேருந்து ஊழியர்கள் ஓய்வெடுப்பது காரணம் என்று கூறும் மக்கள், அதற்கு மாற்று இடங்களை ஏற்பாடு செய்வதுடன், தாம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications