மக்கள், அரசு ஊழியர், கதராடை பயன்படுத்த முதல்வர் வேண்டுகோள்! காந்தியடிகள் படத்திற்கு மலர் தூவி மரியாதை
சென்னை: இன்று மகாத்மா காந்தியடிகளின் 157வது பிறந்த நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.. அந்தவகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும், உத்தமர் காந்தியடிகளின் 157வது பிறந்த நாள் நிகழ்ச்சியில், எழும்பூரில் உள்ள அருங்காட்சிய வளாகத்தில் காந்தியின் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் தேதி ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தில் அகிம்சை என்ற அறவழி போராட்டத்தின் மூலம் வெற்றிகளை பெற்றவர் காந்தி...

மகாத்மா காந்தி
அற வாழ்க்கை, நேர்மை, துணிச்சல், அமைதி, ஏழ்மை என பல்வேறு விஷயங்களுக்கு இன்றுவரை உலகத்துக்கே எடுத்துகாட்டாக விளங்கி வருகிறார்.. எனவேதான், இந்தியாவின் தேசத்தந்தையாக காந்தி பார்க்கப்பட்டு வருகிறார்..
தென் ஆப்பிரிக்காவில் இருந்து தீண்டாமைகளுக்கு எதிராக போராடியவர் காந்தி. தீண்டாமைக்கு எதிராகவும், வேறுபாடுகளுக்கு எதிராகவும், பிற்படுத்தப்பட்ட மக்களை ஹரிஜன் என்ற பெயரில் அழைத்தார் காந்தி... இதற்கு கடவுளின் குழந்தைகள் என்று அர்த்தம். அவர்களுக்கான சேவை அமைப்பை தொடங்கினார்.
அகிம்சை வழியில் மகாத்மா
அண்ணல் காந்தியடிகள் வலிமையான ஆயுதங்கள் கொண்டிருந்த ஆங்கிலேயர்களை எதிர்த்து அஹிம்சை வழியில் போராடி இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர் என்பதால், இந்தியாவின் "தேசத் தந்தை காந்தியடிகள்" எனப் போற்றப்படுகிறார். அதேபோல தன் வாழ்நாளின் இறுதிவரை சுயநலமன்ற சிந்தனைகளாலும், சமூக சீர்த்திருத்தங்களினாலும் அவரை மகாத்மா என்று மக்கள் அழைக்கிறார்கள்..
தமிழ்நாடு அரசால் உத்தமர் காந்தியடிகளின் தியாகத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சென்னை, கிண்டி மற்றும் கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மரியாதை
உத்தமர் காந்தியடிகளின் புகழுக்கு, பெருமை சேர்க்கும் வகையில், கடந்த 15.8.2022 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச்சிலையை நிறுவித் திறந்து வைத்தார்.
இந்நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும், உத்தமர் காந்தியடிகளின் 157வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் அவர்கள், காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சிய வளாகத்தில் காலை 9.30 மணியளவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருங்காட்சிய வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
5 பேருக்கு காந்தியடிகள் காவலர் விருது
இதனிடையே, இன்று காந்தி ஜெயந்தி என்பதால், மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பையும் வெளியிட்டுள்ளது.
அதில், முதல்-அமைச்சர், மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக (i) ப . நடராஜன், காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவுப் பிரிவு, விழுப்புரம் மண்டலம், (ii) மா.சத்யாநந்தன், காவல் உதவி ஆய்வாளர், ஆரோவில் காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்,
முதலமைச்சர் ஸ்டாலின்
(iii) சு. மணிகண்டன், காவல் உதவி ஆய்வாளர், சின்னசேலம் காவல் நிலையம், கள்ளக்குறிச்சி மாவட்டம், (iv) க. நடராஜன், காவல் உதவி ஆய்வாளர், புத்தூர் காவல் நிலையம், கடலூர் மாவட்டம் மற்றும் (v) வா. பெ. கண்ணன், தலைமைக் காவலர்-1403, மத்திய நுண்ணறிவுப் பிரிவு, சேலம் மாவட்டம், ஆகியோருக்கு 2025-ம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இவ்விருது, முதலமைச்சரால் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் நாள் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்துவோம் - ஸ்டாலின்
இந்நிலையில், காந்தியின் 157வது பிறந்தநாளில் அவரது கனவு மெய்ப்பட கதர் தொழிலை செழிக்க செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அந்நிய நாட்டு துணிகளை புறக்கணித்து கதர் ஆடை அணிந்திட வேண்டும் என்பது காந்தியின் கொள்கை. கதர் ரகங்களுக்கு ஆண்டு முழுவதும் அரசு 30% தள்ளுபடி வழங்கி வருகிறது.
கதர் கிராமத்தொழில் வாரியம் மூலம் சிறப்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அரசு ஊழியர், ஆசிரியர், மக்கள் அதிக அளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்திட வேண்டும். காந்தி பிறந்தநாளில் கதர் ஆடை உடுத்துவதே அவருக்கு நாம் செய்திடும் மிகப்பெரிய அஞ்சலி" என்று அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications