சென்னையில் பரவும் புதிய வகை வைரஸ்?.. சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் புதிய வகை வைரஸ் பரவுவதாகவும் தகவல் பரவி வந்த நிலையில், சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை என்று பொது சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றானது நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. இதையடுத்து, உடனடியாக கோவேக்ஷின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதையடுத்து, கொரோனா நோய்த் தொற்று பரவல் சற்று குறைந்திருந்தது. 2019 முதல் சுமார் 3 ஆண்டுகளுக்கு இந்த தொற்றானது நாட்டையே நிலைகுலையச் செய்தது. லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர்.
தொடர்ந்து, காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல் மட்டுமல்லாமல் காய்ச்சலுடன் சேர்ந்து உடல்சோர்வு, வறட்டு இருமல், சளி, தொண்டை வலி போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இவ்வாறு காய்ச்சல் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பே அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸால் பாதிக்கப்படுபவரின் இருமல், தும்மல் மூலம் அருகிலிருப்பவர்களுக்கு இந்த காய்ச்சல் பரவி வருகிறது.
காய்ச்சல் பரவலைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும் போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை என்று பொது சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவது சாதாரண இன்புளூயன்சா காய்ச்சல் மட்டுமே; புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் இல்லை.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு இன்புளூயன்சா வகை பாதிப்பு மட்டுமே உள்ளது. ஆண்டின் இறுதி 3 மாதங்களில் டெங்கு பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications