ஓபிஎஸ் அணியிலிருந்து ஜேசிடி பிரபாகர், புகழேந்தி விலகல்! பன்னீரின் ரூட் சரியில்லை என குற்றச்சாட்டு
சென்னை: ஓபிஎஸ் அணியில் இருந்து ஜேசிடி பிரபாகர், புகழேந்தி விலகுவதாக அறிவித்துள்ளனர். மேலும் ஒருங்கிணைந்த அதிமுக தேவை என்றும் தெரிவித்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜேசிடி பிரபாகர், புகழேந்தி, கே.சி. பழனிசாமி ஆகியோர் அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்பதை உருவாக்கி அதிமுகவை ஒற்றுமைப்படுத்தும் பணியை முன்னெடுத்துள்ளனர்.

இத்தனை நாட்களாக ஓபிஎஸ் அணியில் பயணித்து வந்த ஜேசிடி பிரபாகரன், அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் அனைவரும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என கூறியிருந்தேன். அதன்படி தற்போது ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் புகழேந்தி பேசுகையில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட்டை இழந்துள்ளது. ஓபிஎஸ் வேறு திசையில் பயணிக்கிறார், அதில் எங்களுக்கு உடன்பாடில்லை. இதனால் ஓபிஎஸ்ஸுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.
வடக்கில் இருந்து வந்து ஆள்வதற்கு நாங்கள் விட மாட்டோம். 2ஆவது இடத்திற்கு தேசியக் கட்சிகள் வரவிடக் கூடாது. அனைவரும் ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டும். இவ்வாறு புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி பேசுகையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவு அதிமுகவினருக்கு பேரிடியாக உள்ளது. இதற்கு முன்பும் கூட அதிமுக தோற்றுள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய வாக்கு வங்கி சரிவை கண்டதில்லை. வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது அதிமுக வாக்கு வங்கி. இந்த தேர்தல் தரும் பாடம், ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க வேண்டும் என்பதுதான்.
இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெரும்பாலான அதிமுக தொண்டர்களும் தெரிவிக்கும் கருத்து, அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான். அந்த அடிப்படையில் ஜேசிடி பிரபாகர், புகழேந்தி, நானும் கலந்து பேசி அதிமுகவை ஒற்றுமைப்படுத்தும் பணியை முன்னெடுக்க உள்ளோம். அதிமுக தலைவர்கள் என்றுமே தேசிய கட்சிகளுக்கு அடிபணிந்து செல்லக் கூடாது.
எங்களது ஒரே நோக்கம் அதிமுக ஒன்றுபட்டு உருவாக்கப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரையும் சந்தித்துப் பேசுவோம். வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக ஆளுங்கட்சியாக உருவெடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் உங்கள் கருத்துகளை எங்கள் மூவரிடமும் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணியிலிருந்து இரு தினங்களுக்கு முன்பு கு.ப.கிருஷ்ணன் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. பல இடங்களில் அதிமுகவை பாஜக முந்தியது. இது தொண்டர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகி, புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ உடனான கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை அதிமுக சந்தித்தது.
லோக்சபா தேர்தலில் அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய இரு கட்சிகளும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டனர். தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த நிலையில் ஓபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சுயேச்சை சின்னத்தில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தை ஓ பன்னீர் செல்வம் பிடித்திருந்தார்.












Click it and Unblock the Notifications