உங்க 'அண்ணன்' குரங்கு மாதிரி தாவுனாரா? "காதுல பூ வச்சிருக்கோமா?" - அண்ணாமலையை விளாசிய புகழேந்தி!
சென்னை : பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசி வரும் அண்ணாமலையால் தமிழகத்தில் பாஜக வளராது என கடுமையாக விமர்சித்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து அன்றைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என பதிலளித்திருந்தார். இது பெரும் சர்ச்சையாக மாறியது.
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்ததை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என எடப்பாடி பழனிசாமி சொன்னதை எப்படி பொய் என்று சொல்ல முடியும் என பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலடியாக, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகப் பேசிய அண்ணாமலையை கடுமையாகச் சாடிப் பேசியிருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி.

எடப்பாடி சொன்னாரே
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, "தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ய வேண்டும். அவருக்கு தெரிந்துதான் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது என அருணா ஜெகதீசன் அறிக்கை தெளிவாக கூறியுள்ளது. நீங்கள் அமைத்த விசாரணை ஆணையம் தானே அது. அங்கு நடந்த ஒவ்வொரு நடவடிக்கையும், உளவுத்துறை, காவல்துறை டிஜிபி மூலமாக தெரிவிக்கப்பட்டும் தான் டிவியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என முதல்வர் சொல்வது வெட்கக்கேடு. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கைது செய்ய வேண்டும்.

அண்ணாமலை சப்போர்ட்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசி வருகிறார். ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியிடம் இருந்து இந்த மாதிரியான பேச்சை எதிர்பார்க்கவில்லை. தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களை தலைமைச் செயலாளரும், டி.ஜி.பி.யும் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துக் கொண்டிருந்தது சரியான விஷயம் தான். இது நடைமுறைதான் என அண்ணாமலை கூறியிருக்கிறார்.

குரங்கு மாதிரி தாவினாரா?
துப்பாக்கிச்சூடு குறித்து அண்ணன் எடப்பாடி பழனிசாமி டிவி பார்த்து தெரிந்துகொண்டதில் என்ன தவறு, அதை எப்படி பொய் என்று சொல்ல முடியும் எனக் கேட்டிருக்கிறார் அண்ணாமலை. டிஜிபி, உளவுத்துறை தொடர்ந்து தகவல் அளித்துக் கொண்டிருக்கும்போது டிவி பார்த்து தெரிந்துகொண்டேன் என்றால் என்ன அர்த்தம்? அப்போ, நீங்கள் சொன்னீர்களே குரங்கு மாதிரி என்று, அதுபோல, பழனிசாமி குரங்கு மாதிரி தாவிக் கொண்டிருந்தாரா?

காதுல பூ வச்சிருக்கோமா?
இதுகுறித்து அண்ணாமலை தெளிவாக பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவிக்க தயாரா? டிவியில் 13 பேர் துப்பாக்கிச்சூடு நடந்ததை பார்த்ததாக சொன்னதில் தவறில்லை என்கிறீர்களே அண்ணாமலை.. சரி டிவி பார்த்து தெரிந்துகொண்டாரே அடுத்த நாள், 13 பேரை கொன்ற போலீசாரில் எத்தனை பேரை சஸ்பெண்ட் செய்தார்? எத்தனை பேரை டிஸ்மிஸ் செய்தார் உங்கள் அண்ணன் பழனிசாமி? காதில் என்ன பூ வைத்திருக்கிறோமோ சார்?

அண்ணன் பழனிசாமி
அண்ணன் பழனிசாமியால் உங்களுக்கு என்ன லாபம்? உங்களால் பழனிசாமிக்கு என்ன லாபம் என எனக்குத் தெரியாது. 13 பேர் கொலைக்குக் காரணமான எடப்பாடி பழனிசாமியை கையில் விலங்கு மாட்டி கைது செய்து அழைத்து வர வேண்டும். இது என்ன சாதாரண விஷயமா? அண்ணாமலை வீட்டில் இப்படி ஒரு துப்பாக்கிச்சூடு நடந்திருந்தால் அவர் இவ்வாறு பேசுவாரா? என் குடும்பத்தில் இப்படி ஒன்று நடந்திருந்தால், எடப்பாடி குடும்பத்தினருக்கு இப்படி ஒன்று நடந்திருந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

பத்திரிகையாளர்களை கேவலமாக
பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசி வரும் அண்ணாமலையால் தமிழகத்தில் பாஜக வளராது. பத்திரிகையாளர்கள் ஒட்டுமொத்தமாக அண்ணாமலையை புறக்கணிக்கும்போது தான் வலி தெரியும். பத்திரிகையாளர்களை குரங்கு என்பீர்கள். 200, 500, 1000 என ஏலம் விடுவீர்கள். அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே தமிழகத்தில் பாஜக வளரும்.

அண்ணாமலையிடம் விசாரிக்க வேண்டும்
கோவை கார் சிலிண்டர் வெடி விபத்தில் விசாரணை அறிக்கை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த ரகசியங்களை பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவது குறித்து உள்துறை அமைச்சகம் விளக்க வேண்டும். கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள். முதல்வர் கவனம் செலுத்தி, கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications