கூகுளில் இதையா காதலி தேடினார்? புனே ரியல் எஸ்டேட் கேதனை கொல்ல மாறுவேடம்.. அழித்த சாட்டிங் ஹிஸ்டரி
மும்பை: புனேவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவருடைய வருங்கால மனைவி சியா கோயல் மற்றும் அவரது காதலன் சேத்தன் சவுத்ரி ஆகியோரின் அடுத்தடுத்த அதிர்ச்சியூட்டும் சதித்திட்டங்கள் அம்பலமாகியுள்ளன. இந்த வழக்கின் விசாரணை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், கேதனை எப்படி மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்றார்கள் என்பதைப் போலீசாரிடம் சியா நேரில் நடித்துக் காட்டியுள்ளார்.
வருங்கால கணவரான கேதனை சியாவுக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எப்படியாவது அவரைக் கொலை செய்துவிட்டு, தன்னுடைய காதலன் சேத்தனைத் திருமணம் செய்து கொள்ள சியா திட்டமிட்டுள்ளார். இதற்காகக் காதலன் சேத்தனுடன் சேர்ந்து சியா 3 முறைக்கு மேல் கொலை முயற்சி திட்டங்களை வகுத்துள்ளார். கடந்த 7 மாதங்களில் மட்டும் இந்த ஜோடி 2,004 முறை போனில் பேசி, கிட்டத்தட்ட 238 மணி நேரம் இந்தக் கொலைச் சதி குறித்து ஆலோசித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

4-வது முயற்சியில் அரங்கேறிய கொடூரம்
மே 31, ஜூன் 4 மற்றும் ஜூன் 14 ஆகிய தேதிகளில் கேதனைக் கொலை செய்ய முயன்று அவர்கள் தோல்வியடைந்துள்ளனர். இறுதியாக ஜூன் 18-ம் தேதியன்று துல்லியமாகத் திட்டமிட்டு, கேதனை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார் சியா.
சம்பவம் நடந்த போது, "பலத்த காற்று வீசியதால் போட்டோ எடுக்கச் சென்ற கேதன், எதிர்பாராதவிதமாகக் கால் தவறி விழுந்துவிட்டார்" என்று போலீசாரிடம் கூறி சியா அழுது நாடகமாடியுள்ளார். ஆனால், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீஸார் ஆய்வு செய்தபோது உண்மை வெளிவந்தது. கடும் வெயிலிலும் ஒருவர் ஹூடி (Hoodie) ஆடை அணிந்து சியாவின் பின்னால் செல்வது அதில் பதிவாகியிருந்தது.
கேதன் திரும்பும் போதெல்லாம் அந்த ஹூடி அணிந்த நபர் தரையில் அமர்ந்து தன்னை மறைத்துக் கொண்டது போலீசாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த நபர் யார் என்று விசாரித்தபோது, அது சியாவின் காதலன் சேத்தன் என்பது உறுதியானது. இதையடுத்து, சியா மற்றும் சேத்தன் ஆகிய இருவரையும் புனே கிராமப்புறக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மலை உச்சியில் குற்றக் காட்சி ஒத்திகை
கைது செய்யப்பட்ட சியா கோயல் மற்றும் சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரையும் புனே கிராமப்புறப் போலீசார் லோஹாகட் கோட்டைக்கு நேரடியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். குற்றம் நடந்த அதே இடத்திற்கு அவர்களைக் கொண்டு சென்று, கொலையை எப்படி அரங்கேற்றினார்கள் என்பதைச் செய்து காட்டச் சொல்லி, குற்றக் காட்சி மறுஒத்திகை (Crime Scene Reconstruction) நடத்தப்பட்டது.
இதற்காக லோஹாகட் கோட்டைக்கு நேற்று சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முன்கூட்டியே நடந்த ஒத்திகையும் கூகுள் தேடல்களும்
இந்த ஒத்திகையின் போது சியா மற்றும் சேத்தன் ஆகிய இருவரையும் போலீசார் தனித்தனியாகச் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கேதனை மலை உச்சிக்கு அழைத்துச் சென்றபோது சேத்தன் எவ்வாறு பின்தொடர்ந்தார், கேதனைத் தள்ளிவிடுவதற்கு முன்னால் சியா என்ன மாதிரியான சிக்னல்களை சேத்தனுக்குக் கொடுத்தார் என்பதைப் போலீஸார் இதன் மூலம் துல்லியமாகப் பதிவு செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் சியாவின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரனிடமும் போலீஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். சியாவும் சேதனும் கொலை செய்வதற்கு முன்பே இதே லோஹாகட் கோட்டைக்கு பலமுறை வந்து, கொலையை எவ்வாறு செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே ஒத்திகை பார்த்த அதிர்ச்சியூட்டும் தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒருவேளை போலீசாரிடம் மாட்டிக் கொண்டால் அவர்களின் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும், எப்படித் தப்பிக்க வேண்டும் என்றும் இந்த ஜோடி தனியாகத் திட்டமிட்டுள்ளது. கேதனைக் கொலை செய்வதற்கான பல்வேறு வழிகளை இவர்கள் கூகுளில் தேடியுள்ளனர். அதுமட்டுமின்றி, போலீசாரின் சந்தேகத்தைத் திசைதிருப்ப இருவரும் மாறுவேடத்தில் வந்து இந்தக் கொலையைச் செய்யத் திட்டமிட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கொலைக்கான தடயங்களை முற்றிலும் அழிப்பதற்காக, குற்றத்தைச் செய்வதற்கு முன்னும் பின்னும் தங்களின் செல்போன்களில் இருந்த சாட்டிங் வரலாறு (Chat History) மற்றும் கூகுள் தேடல் வரலாறு (Search History) போன்றவற்றை அவர்கள் அழித்துள்ளனர். அவ்வாறு அழிக்கப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களை மீட்டெடுப்பதற்காக, அவர்களின் செல்போன்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம்
நேற்று நடந்த குற்றக் காட்சி ஒத்திகை குறித்துப் புனே கிராமப்புற போலீஸ் சூப்பிரண்டு (SP) சந்தீப் சிங் கில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "குற்றவாளிகள் இருவரும் லோஹாகட் கோட்டையிலிருந்து எந்தப் பாதை வழியாக நடந்து வந்தார்கள், எந்தெந்த இடங்களில் நின்று கண்காணித்தார்கள், மலை உச்சியிலிருந்து கேதனை எவ்வாறு தள்ளிவிட்டார்கள் என்பதைப் போலீசாரிடம் நேரில் செய்து காட்டினர்" என்றார்.
மேலும், கேதன் அகர்வால் எவ்வாறு, எங்கிருந்து கீழே தள்ளப்பட்டார் என்பது குறித்துக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலங்களைச் சரிபார்க்க இந்தத் தடய அறிவியல் ரீதியிலான மறுஒத்திகை பெரிதும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications