”அனைவருக்கும் தகுதியான வேலை” தமிழக அரசின் இலக்கு இதுதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: அனைவருக்கும் வேலை என்பதைவிடவும், அனைவருக்கும் தகுதியான வேலை என்பதே இலக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களின் தனித் திறமையை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் நோக்கில் 'நான் முதல்வன்' திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், சிந்தனையில், ஆற்றலில் மேம்படுத்துவது முக்கிய நோக்கமாகும்.
இந்த நிலையில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான அரங்குகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்களுக்கான திறன்களை மேம்படுத்த 50க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடனான தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இது நாட்டுக்கே வழிகாட்டக் கூடிய ஆட்சியாக நடைபெற்று வருகிறது. இதனையறிந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வருகின்றனர். தொழில் வளம் இல்லை என்ற நிலையில் மாற்றி வருகிறது.

கனவு திட்டம்
நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவு திட்டம். என் பிறந்தநாளன்று நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தேன். நான் மட்டும் முதல்வன் அல்ல, அனைவரும் ஒவ்வொரு வகையிலும் முதல்வனாக வர வேண்டும். இந்த திட்டம் என் கண்முன்னால் வளர்ச்சியடைவதை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்.

நோக்கம் என்ன?
இந்த திட்டத்தின் நோக்கம், இளைஞர்களை தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப திறன் படைத்தவர்களாக வளர்த்து எடுப்பது தான். இதனை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள், மருத்துவம் மற்றும் பொறியியல் நோக்கி வருகிறார்கள். ஆனால் அதற்கு முன் மற்ற துறைகளை பற்றி தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

பெற்றோருக்கு அறிவுரை
பெற்றோரும் பல்வேறு துறைசார் படிப்புகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். பிள்ளைகள் மீது பெற்றோர் எந்த ஆசையையும் திணிக்க கூடாது. பெற்றோர் தங்கள் ஆசைகளை திணிப்பதால் பிள்ளைகளால் படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை. இதனால் குழந்தைகளின் ஆசையை தெரிந்துகொண்டு படிக்க வையுங்கள்.
அதற்காக தான் கல்லூரி கனவு வழிகாட்டல் என்ற நிகழ்ச்சியை அரசு தொடங்கியுள்ளது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்கள் எப்போதும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களுக்கு தேவை சிறந்த வழிகாட்டலும், ஊக்கமும் மட்டும்தான்.

புதிய படிப்புகள்
இன்று தொடங்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் மாணவர்கள் அனைத்து தகவல்களையும் பெற முடியும். ரொபோட்டிக்ஸ், விர்சுவல் ரியாலிட்டி, சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட நவீன கூடுதல் பிரிவுகளை அறிமுகம் செய்துவைத்துள்ளோம். புதிய புதிய தொழில்கள் உருவாகி வருவதால், மாணவர்கள் புதிய படிப்புகளை படிக்க வேண்டும். அதற்கு ஏற்ப மாணவர்களுக்கான தகுந்த வழிகாட்டுதல்களை நான் முதல்வன் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து மேம்படுத்தப்படும்.

மொழி புலமை தேவை
மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுத, பேச, படிக்க தெரிந்திருக்க வேண்டும். நல்ல மொழியாற்றல் நமது வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். ஆங்கிலம் தெரியவில்லை என்பதால் சில மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. அதற்கு ஏற்ப ஆங்கில பேச்சாற்றலுக்கான அனைத்து கல்லூரி மற்றும் மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும்.

நம் இலக்கு
அனைவருக்கும் வேலை என்பதைவிடவும், அனைவருக்கும் தகுதியான வேலை என்பதே இலக்கு. மாணவர்கள் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. மாணவர்களாகிய நீங்களும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications