ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் குறித்த கேள்வி.. படித்து விட்டு சொல்வதாக நழுவிய விஜயபாஸ்கர்
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அளித்துள்ள அறிக்கை குறித்து விஜயபாஸ்கரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் அறிக்கையை படித்துவிட்டு பதில் அளிப்பதாக கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டதை அடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அமைக்கப்பட்ட இந்த விசாரணை ஆணையத்திற்கு பல முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

சட்டசபையில் தாக்கல்
பலமுறை கால நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், விசாரணை முடிந்து கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணை ஆணையம் தனது அறிக்கையை முதல்வர் மு. க ஸ்டாலினிடம் சமர்பித்தது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கைகள் சட்டமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெயர்
இந்த அறிக்கையில், சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

விஜய பாஸ்கரிடம் கேள்வி
இதையடுத்து, இந்த பரிந்துரைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதேபோல் இந்த அறிக்கை மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வு துறையிடமும் இந்த அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சட்டசபைக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான டாக்டர் சி விஜயபாஸ்கரிடம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்துள்ள அறிக்கை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

படித்து விட்டு கூறுகிறேன்
இதற்கு பதிலளிக்க மறுத்த விஜயபாஸ்கர், 'அறிக்கையை முழுவதுமாக படித்து விட்டு எனது பதிலை சொல்கிறேன்' என்று பதில் கூறிவிட்டு நடந்து சென்று கொண்டே இருந்தார். எனினும், விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். ஆனாலும் மீண்டும் அதே பதிலை கூறிவிட்டு தனது காரில் அவர் புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications