ராணிப்பேட்டையில் ஆர்.காந்தி வேட்புமனுதாக்கல்! ஸ்டாலினுக்கு தெரியுமான்னு கேட்டதற்கு அவர் சொன்ன பதில்!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சட்டசபை தொகுதி வேட்பாளராக ஆர்.காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த தொகுதியில் அவரது மகன் வினோத் காந்தி போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில் காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக 164 இடங்களில் போட்டியிடுகிறது.

அந்த வகையில் ராணிப்பேட்டை சட்டசபை தொகுதிக்கு திமுக வேட்பாளராக அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இதற்கு அமைச்சர் காந்தி எதிர்ப்பு தெரிவித்து, தனக்கே சீட் வழங்க வேண்டும் என கோரி வந்தார்.
தலைமையும் வேட்பாளர் மாற்றம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இந்த பஞ்சாயத்தால் வினோத் காந்தி இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருந்தார்.
இந்த நிலையில் ராணிப்பேட்டையில் போட்டியில்லை என கூறி தந்தைக்காக மகன் வினோத் விட்டுக் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதுகுறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்து, என்னை நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த தலைவருக்கும், சகோதரர் Udhayanidhi Stalin அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன்.
என்னை உறுதியாக ஆதரித்து, நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இன்னும் நீண்ட வாழ்க்கை முன் உள்ளது என்பதில் உற்சாகத்துடன், சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன்.
வினோத் காந்தி
மாநில துணை செயலாளர்- திமுக சுற்றுசூழல் அணி
இவ்வாறு தெரிவித்திருந்தார். தந்தைக்காக மகன் விட்டுக் கொடுத்திருக்கிறார் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில் ராணிப்பேட்டை சட்டசபை தொகுதியின் திமுக வேட்பாளராக ஆர்.காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், என் மகனுடன்தான் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தேன். தொகுதியில் எந்த சண்டையும் இல்லை. ஸ்டாலினின் ஒப்புதலுடன்தான் வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளேன் என காந்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications