ஆர்.கே. நகர் தேர்தலில் ரூ 20 டோக்கன் வழங்கியதே தங்கதமிழ் செல்வன்- டிடிவி தினகரன் தாக்கு
தேனி: சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியதில் முக்கியமானவர் தங்கதமிழ்ச்செல்வன்தான் என தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்த போது டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேனி ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்த டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் போலீஸார் புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டனர். இதற்கு ஆளும் கட்சியின் அழுத்தமாக இருக்கலாம்.

வேனில் இருந்து சிலரை இறக்கிய பின்னர் அனுமதித்தனர். சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஒரு ஓட்டுக்கு ரூ 10 ஆயிரம் கொடுத்ததாக தகவல் கிடைத்தது. அப்போது எங்களிடம் இருந்த 18 எம்எல்ஏக்களில் சிலர் கோபமடைந்தனர்.
உடனே 30, 40 பூத்களுக்கு டோக்கன் கொடுத்தனர். அது டோக்கனா, பேப்பரா, 20 ரூபாயா என எனக்குத் தெரியாது. ஆனால் அந்த டோக்கன் கொடுத்த விவகாரத்தில் மிகவும் முக்கியமானவர் தற்போதைய திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வன் ஆவார். இதற்காக நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கண்டித்தேன். திருடியவனே திருடன் திருடன் என சொல்லிக் கொண்டு ஓடுவதை போல் இருக்கிறது அவர் கூறுவது!
தற்போது தோல்வி பயத்திலும் விரக்தியில் உளருபவர்களுக்கும் பதில் கூற நான் விரும்பவில்லை. ஓபிஎஸ்ஸுடன் ஆலோசித்து ராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்வேன். நாங்கள் இணைந்ததே ஜெயலலிதா இயக்கத்தை மீட்டு தொண்டர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கே ஆகும்.
தற்போது இரட்டை இலையை எதிர்த்து வெற்றி பெற்றுதான் அதிமுகவை காப்பாற்ற முடியும். தேனி தொகுதி மக்கள் தங்களில் ஒருவனாகத்தான் என்னை பார்க்கிறார்கள். தேனி மக்களவைத் தொகுதிக்கு என்ன நலத்திட்டங்கள் வேண்டுமோ அனைத்தையும் பிரதமர் மோடியிடம் இருந்து பெற்றுக் கொடுப்பேன். தேனிக்கு அனைத்து நலத்திட்டங்களும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில்தான் வந்தது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சேடப்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.
அது போல் தற்போது பிரதமர் மோடியிடம் அனைத்துக் கோரிக்கைகளையும் முன் வைத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன் என டிடிவி தினகரன் தெரிவித்தார். தேனி தொகுதி டிடிவி தினகரனுக்கு நல்ல அறிமுகம் உள்ள தொகுதி. கடந்த 1999ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அவர் வென்றுள்ளார், 2004 ஆம் ஆண்டு அங்கு போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றதால் வடசென்னை தொகுதியான ஆர்.கே. நகர் தொகுதி விஐபி தொகுதியாக மாறியது. அவரது மறைவிற்கு பிறகு இடைத்தேர்தலில் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ஆர்.கே. நகரில் உள்ள வீடுகளுக்கு அமமுகவினர் ரூ 20 டோக்கன் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது இந்த ரூ 20 நோட்டு டோக்கனுக்கு பணம் தரப்படும் என வாக்குறுதி கொடுத்த நிலையில் அதை ஏமாற்றியதால் அந்த தொகுதிக்குள்பட்ட வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தேர்தலை நிறுத்துமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தேர்தலே நடக்குமா நடக்காதா என்ற கேள்வி எழுந்தது. எனினும் இந்த தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என்று கூறிய ஆணையம் நடத்தியும் காண்பித்தது.












Click it and Unblock the Notifications