சீருடையில் போயஸ் தோட்டம் வந்த காவல் அதிகாரிகள்! ஜெயலலிதா கேட்ட ஒரு கேள்வி! ரபி பெர்னார்டு சுவாரஸ்யம்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதுவரை யாரையும் காலில் விழுமாறு கூறியதில்லை, அதை அவர் விரும்பியதும் இல்லை என முன்னாள் எம்பி ரபி பெர்னார்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அவருடன் பழகியவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அந்த வகையில் பத்திரிகையாளரும் முன்னாள் எம்பியுமான ரபி பெர்னார்டிடமும் பேட்டி எடுக்கப்பட்டது.

அவர் கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து சொல்ல வேண்டும் என்றால் எனக்கு ஒரு பாடல்தான் நினைவுக்கு வருகிறது. கன்றின் குரலும் கன்னித்தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா! கருணை தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா அம்மா! எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனதே அம்மா அம்மா!
கவிஞர் கண்ணதாசனின் பாடல் இது! 22 வயதில் உற்றார் உறவினர்களை இழந்த ஒரு பெண் தன்னை நிலைப்படுத்திக் கொள்வது சாதாரண விஷயம் அல்ல. அதை அவர் எப்படி செய்தார் என உற்று நோக்கும் போது அவருடைய தனித்தன்மை தெரியும். யாருமே அவ்வளவு பெரிய இடத்திற்கு எளிதாக வந்துவிட முடியாது.
எல்லோராலும் அன்பு செய்ய முடியாது. நான் முதல் முறையாக ஜெயலலிதாவை 1997ஆம் ஆண்டு மார்ச் மாதம் சந்தித்தேன். மிஸ்டர் பெர்னார்டு என்றே என்னை கடைசி சந்திப்பு வரை அழைத்தார். என்னிடம் ஒரு இயக்குநரின் பெயரை கூறி அவரை தெரியுமா என கேட்டார்.
நானும் தனிப்பட்ட முறையில் எனக்கு அவரை தெரியாது. நீங்கள் நடித்த சில படங்களை இயக்கினாரே அதனால் எனக்கு தெரியும் என்றேன். அவருக்கு உங்கள் கம்பெனியில் வேலை போட்டு தர முடியுமா என கேட்டார். நானும் கண்டிப்பாக தருகிறேன், Quality control incharge ஆக பணியமர்த்துகிறேன் என கூறி மாத சம்பளத்தையும் அவரிடம் கூறினேன். அவராகவே ஒரு ஊதியத்தை சொல்லி , இதை கொடுக்க முடியுமா என கேட்டார்.
சட்டசபையில் அவர் மீது ஒரு வழக்கு எதிரொலித்தது, சசிகலா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், தேர்தலில் ஜெயலலிதா தோல்வி அடைந்திருந்தார். இத்தனை சூழலுக்கு மத்தியிலும் என்னை சந்தித்த ஜெயலலிதா இன்னொருவருக்காகத்தான் உதவி கேட்டிருந்தார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவரை பேட்டி எடுக்கும் போது நான் மிஸ் ஜெயலலிதா என்றே அழைத்தேன். அதற்கு அவர் எதையும் சொல்லவில்லை. அவரும் எந்த நேரத்தில் யாரை எப்படி அழைக்க வேண்டுமோ அப்படி அழைக்க விரும்புவார். நான் ஒரு நாள் கூட ஜெயலலிதாவை வளைந்து நெளிந்து கும்பிட்டதோ காலில் விழுந்ததோ கிடையாது. வணக்கம் மட்டும்தான் சொல்வேன்.
ஜெயலலிதா இதுவரை யாரையும் காலில் விழு என்று கூட சொன்னதில்லை. 1993 அல்லது 1994 ஆம் ஆண்டு டிஜிபியாக இருந்த போலீஸ் அதிகாரி அலெக்சாண்டர் என்னிடம் சொன்னது. புத்தாண்டு அன்று ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகளை சொல்ல எல்லா காவல் உயரதிகாரிகளும் ஷூக்களை கழற்றி வைத்துவிட்டு யூனிபார்முடன் சென்றுள்ளனர்.
அப்போது ஜெயலலிதா அவர்களை பார்த்துவிட்டு Where are your shoes? என கேட்டு, அது உங்கள் சீருடையின் ஒரு பகுதி, ஷூ போட்டுவிட்டு வாருங்கள் என சொன்னாராம். அவருடைய கண் அசைவிலேயே எங்கள் வாழ்க்கை மாறிய காலம் அது. காலில் விழுந்தெல்லாம் மாறியதில்லை. இவ்வாறு ரபி பெர்னாட் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications