ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? நேரடியாக கேட்ட திமுக.. பதில் சொல்ல தயங்கும் காங்கிரஸ்!
சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய ராகுல் காந்தி தயக்கம் காட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே திமுக தரப்பில் ராகுல் காந்தி தரப்பிடம் பிரச்சாரத்திற்கு நேரம் கேட்ட போது, இதுவரை பதில் அளிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கு பின்னணியில் தொகுதி பங்கீட்டில் ராகுல் காந்தி எதிர்பார்ப்பு நடக்காததே காரணம் என்று சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே இருக்கிறது. புதுச்சேரி, கேரளா, அசாம் மாநில தேர்தல்கள் முடிவடைந்துவிட்ட சூழலில், தமிழ்நாடு மற்றும் மேற்வங்கம் ஆகிய மாநிலங்களில் அடுத்ததாக தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் ராகுல் காந்தி இன்னும் ஒருமுறை கூட தமிழ்நாடு வந்து காங்கிரஸ் கட்சியினருக்காக பிரச்சாரம் செய்யாமல் இருக்கிறார்.

புதுச்சேரிக்கு பிரச்சாரத்திற்கு வந்த ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலினை கூட சந்திக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் புதுச்சேரியில் திமுக வேட்பாளர்களை மேடையில் கூட ராகுல் காந்தி ஏற்றவில்லை. ஆனாலும் முதல்வர் ஸ்டாலின் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை மேடையேற்றி வாக்கு சேகரித்தார். அதேபோல் திமுக தரப்பில் ராகுல் காந்தியிடம் பிரச்சாரத்திற்கான நேரம் கேட்கப்பட்டுள்ளது.
ஆனால் ராகுல் காந்தி தரப்பு இதுவரை பிரச்சாரத்திற்கு நேரம் கொடுக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தி பிரச்சாரம் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பின்னணியில் ராகுல் காந்தி எதிர்பார்த்ததை போல் திமுகவுடன் தொகுதி பங்கீடு நடக்கவில்லை. ராகுல் காந்தி 35 சீட்கள் வரை எதிர்பார்த்தார்.
இதனால் திமுகவின் 28 தொகுதிகள் என்ற ஆஃபருக்கு ராகுல் காந்தி உடன்படவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் ப.சிதம்பரம் மூலமாக கூட்டணி பேச்சுவார்த்தையை செல்வப்பெருந்தகை சுமூகமாக முடித்தார். ஆனால் ராகுல் காந்தி விரும்பிய வேட்பாளர்களுக்கு தொகுதிகள் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே செல்வபெருந்தகையை டெல்லி அழைத்து ராகுல் காந்தி ராஜினாமா கடிதத்தை பெற்றதாக தெரிகிறது.
டெல்லியில் இருந்து வந்த பின்னரே செல்வப்பெருந்தகை தேர்தலுக்கு பின் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன் என்று கூறி இருந்தார். அதுமட்டுமல்லாமல் பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருப்போரும், தவெக உடனான கூட்டணியையே விரும்பி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் தவெக இம்முறை கூடுதல் வாக்குகளை பெறும் என்ற ரிப்போர்ட் வந்துள்ளது. இதனால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க வேண்டுமென்றால், ராகுல் காந்தியின் பிரச்சாரம் அவசியம் என்று திமுக கருதுகிறது. இதற்காக ராகுல் காந்தியிடம் திமுகவினர் நேரம் கேட்டுள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தயங்கி வருகின்றனர்.
ஏனென்றால் ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வருவதற்கு விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. பாஜக தரப்பில் பிரதமர் மோடி, அமித்ஷா, பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் தரப்பில் நேற்றுதான் டிகே சிவக்குமார் முதல்முறையாக வந்துள்ளார். இதனால் ராகுல் காந்தி வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications