தவெகவுடன் கூட்டணியா? ராகுல் ஏன் விஜய் உடன் பேசினார்? காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி கொடுத்த விளக்கம்!
சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இது அரசியல் களத்தில் விவாதங்களைக் கிளப்பிவிட்ட நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பலரும் மூச்சுத் திணறி மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிரச்சாரம் முடிந்ததும் உடனே கிளம்பிச் சென்ற விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றபிறகே இந்தத் துயரச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி விஜய்யை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சுமார் 15 நிமிடங்கள் பேசியதாக கூறப்பட்டது. இருவருக்கும் இடையே நடந்த கலந்துரையாடலில், கரூர் கள நிலவரம் குறித்து ராகுல் கேட்டறிந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், தவெக தலைவர் விஜய்க்கு ஆறுதல் கூறியதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் பரவின. ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தொடர்புகொண்டு, விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாகவும், அதன் காரணமாக விஜய் மீது நடவடிக்கை இல்லை என விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இது குறித்து இன்று பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதில் அளித்த கே.எஸ்.அழகிரி, "ராகுல் காந்தி ஒரு தேசிய தலைவர். விஜய்க்கு நீண்ட கால நண்பர். இருவருக்கும் இடையே நீண்ட காலமாகவே தனிப்பட்ட முறையில் பழக்கம் உள்ளது. ராகுல் காந்தியை பார்க்க வேண்டும் என்றால், எந்த காங்கிரஸ் தலைவரின் தயவும் தேவை இல்லை. நேரடியாக ராகுல் காந்தியை தொலைபேசியில் பேசி விட்டு, நேரில் சென்று சந்திப்பார்.
அதற்காகவெல்லாம் விஜய்யோடு காங்கிரஸ் கட்சி கூட்டு சேரும் என சொல்வது தவறு. காங்கிரஸ் கட்சி அப்படி எல்லாம் போகாது. இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களில், காங்கிரஸ் அல்லாத அரசியல் கட்சியில் மிக தைரியமாக பாஜகவை விமர்சிக்கும் முதலமைச்சர் என்றால் அது ஸ்டாலின்தான். இதை பெருமையாக கருதுகிறோம். அவர் மேல் எங்கள் இதயத்தில் உயர்ந்த இடம் இருக்கிறது" என தெரிவித்தார்.
திமுகவை ஆதரிக்கிறோம், ஸ்டாலின் வேண்டியவர் என்பதற்காக இன்னொருவருடன் பேசாமலேயோ, அவரின் கருத்தை எங்களால் கேட்காமலேயோ இருக்க முடியாது. நட்பில் நாணயம் உண்டு, நேர்மை உண்டு, பேராண்மை உண்டு. இதை அரசியல் ஆக்க வேண்டாம். வரும் தேர்தலில் திமுக உடன் கூட்டணி நிச்சயமாக தொடரும்.
கூட்டணியில் அதிக இடங்களும் அதிகாரப் பகிர்வும் தான் கேட்கிறோம். அதையும் தோழமையுடன்தான் கூறினோமே தவிர, எதிர்ப்பாக கூறவில்லை. விஜய்யுடன் பேசுவதால் திமுகவுக்கு எதிர்ப்பு என்றெல்லாம் நினைக்க வேண்டாம். எந்த சூழலிலும் திமுக உடனான காங்கிரஸ் கூட்டணி உடையாது" என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications