Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து வெளியே யாரும் எதுவும் பேசக் கூடாது என ராகுல் காந்தி சொல்லியும், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், கூட்டணிக்குள் குண்டு வைக்கும் அளவுக்கு பேசி வருவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அது போல் ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கப்பட்டது.

Rahul Gandhi Manickam tagore

இந்த தொகுதி உடன்பாடு எட்டுவதற்கு முன்னால் திமுகவுக்கு எதிராகவே செயல்பட்டு, பேசி வந்தார் மாணிக்கம் தாகூர். அதாவது காங்கிரஸுக்கு 40 தொகுதிகள் வேண்டும், ஆட்சியில் பங்கு, உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீதம் இடங்கள், ராஜ்யசபா சீட் என டிமாண்ட் வைத்திருந்தார்.

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து பதிவிடுவதும், அதற்கு திமுகவினர் பதிலடி கொடுப்பதுமாக இருந்தது. ஒரு கட்டத்தில் மதுரை வடக்கு தொகுதியின் திமுக எம்எல்ஏ கோ. தளபதி, காங்கிரஸ் கட்சிக்கு பூத் அமைக்கக் கூட ஆட்கள் இல்லை என்றும், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோருக்கு அடுத்த தேர்தலில் சீட் கொடுக்கக் கூடாது என்றும் விமர்சித்திருந்தார்.

இதற்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனத்தை பதிவிட்டதுடன் மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றார். தேசிய தலைவர் கார்கேவிடம் மதுரை வடக்கு தொகுதியை கேட்டு வாங்க கூறுவோம் என்றும் மாணிக்கம் தாகூர் சவால் விடுத்திருந்தார்.

மேலும் மதுரையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டியிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. கோ.தளபதி பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியை நேரில் சந்தித்த கனிமொழி, 40 தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்பதையும் தெளிவாக கூறியிருந்தார். மேலும் ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு சரி பட்டு வராது என்பதையும் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகும் மாணிக்கம் தாகூர் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சியே கேட்டு பெறும் என்று கூறியிருந்தார். ஒவ்வொரு முறையும் கூட்டணி குறித்து திமுக- காங்கிரஸ் பேச்சுவார்த்தையின் போது மாணிக்கம் தாகூர் ஏதாவது ஒன்றை பேசி வந்தார். அவருடன் ராஜேஷ் குமார் உள்ளிட்டோரும் பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் தவெகவுடன் கூட்டணி அமைக்கவும் இவர்கள் விரும்பியதாக சொல்லப்படுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலினே கோபப்படும் அளவுக்கு இவர்களது செயல்பாடுகள் இருந்ததால் காங்கிரஸ் தலைமை மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ராஜேஷ் குமார், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோரை டெல்லிக்கு வரவழைத்து, கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என ராகுல், கார்கே உள்ளிட்டோர் அறிவுரை கூறி அனுப்பியிருந்தனர்.

எனினும் மதுரை திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் கூட்டத்தை கூட்டிய மாணிக்கம் தாகூர், ஆட்சியில் பங்கு, திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினார். இது திமுக தலைமைக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகார் கடிதத்துடன் கார்கேவை, செல்வப்பெருந்தகை சந்திக்கவும் சென்றிருந்தார்.

காங்கிரஸ் கட்சியில் ஒரு சிலருக்கு தவெகவுடன் கூட்டணிக்கு செல்ல விரும்பினார். ஆனால் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் திமுகவுடன் கூட்டணி என்பதையே விரும்பினர். இதே நிலைப்பாட்டைத்தான் சோனியா காந்தியும் எடுத்திருந்தார்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து போனால் போகட்டும் என்ற அளவுக்கு திமுக மூத்த தலைவர்கள், ஸ்டாலினிடம் கூறி வந்தனர். இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் ப.சிதம்பரத்தின் பேச்சுவார்த்தையால் திமுக காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அப்போது மாணிக்கம் தாகூர் தனது பதிவில், ஒரு சிறுவன் கையில் விளையாட்டு காரை வைத்துக் கொண்டு, ஷோரூம்க்குள் இருக்கும் விலை உயர்ந்த காரைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்தப் படத்தில், "ஒரு நாளில் அல்ல, ஆனால் நிச்சயமாக ஒரு நாள்" என எழுதப்பட்டுள்ளது. இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மாணிக்கம் தாகூர் "படித்ததில் பிடித்தது" எனத் தெரிவித்திருந்தார்.

ஒரு வழியாக திமுக காங்கிரஸ் கூட்டணி அமைந்துவிட்டது என காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த மாணிக்கம் தாகூர் தற்போது மீண்டும் ஆரம்பித்துவிட்டார்.

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூரிடம், திமுகவிடம் இருந்து மதுரை வடக்கு தொகுதியை கேட்டு பெறுவோம் என சொன்னீர்களே, அங்கு காங்கிரஸ் போட்டியிடுகிறதா என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு மாணிக்கம் தாகூர் தொகுதி பங்கீடு குழு சென்று அது தொடர்பாக பேசும் போது அது பற்றி தெரியவரும் என்றார்.

மேலும் தொண்டர்கள் எல்லாம் ஒற்றுமையாகிவிட்டார்களா என்ற கேள்விக்கு , மாணிக்கம் தாகூர், "தொண்டர்களுக்கு மரியாதை கொடுத்தால் ஒற்றுமையாகி விடுவார்கள். காங்கிரஸ் கட்சியை பொருத்த வரைக்கும் எங்களுக்கு மரியாதையும், அன்பும் தான் முக்கியம். நீங்கள் எனக்கு மரியாதை கொடுக்காவிட்டால் கண்டுகொள்ளாமல் சென்று விடுவேன். மரியாதை கொடுத்தால் நின்று உங்களிடம் பேசுவேன் " என பதில் அளித்துள்ளார்.

ராகுல் காந்தி அறிவுறுத்தியும், திமுக - காங்கிரஸ் கூட்டணியை படாதபாடுபட்டு ப.சிதம்பரம் அமைத்தும், எதை பற்றியும் கவலைப்படாமல் இப்படி அமைந்துவிட்ட கூட்டணியில் குண்டு வைப்பது போல் மாணிக்கம் தாகூர் செயல்படுவது சரியல்ல என திமுகவினர் கொந்தளிப்பில் உள்ளனர். மேலும் ராகுல் காந்தி, கார்கேவைவிட மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+