ராகுல் காந்தியை பேச விடுங்களேன்.. ஏன் அச்சம்? பாஜகவை லிஸ்ட் போட்டு விமர்சித்த கே எஸ் அழகிரி
ஜனநாயகத்தின் குரல்வளையை பாஜக நெறிக்கிறது என்று கே எஸ் அழகிரி கூறியுள்ளார்.
சென்னை: ஜனநாயகத்தின் குரல்வளையை பாஜக நெறிக்கிறது என்றும் நாடாளுமன்றத்தை முடக்குவதே பாரதிய ஜனதா கட்சிதான் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனின் 91-வது பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கேக் வெட்டினார். இதைத்தொடர்ந்து, கே எஸ் அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனநாயகத்தை காலில் போட்டு..
ராகுல் காந்தி இங்கிலாந்தில் உள்ள கல்லூரிக்கு சென்று ஜனநாயகம் குறித்து பேசினார். அங்கு, இந்திய நாடாளுமன்றத்தில் நடந்தவை பற்றி பேசினாரே தவிர ஜனநாயகம் தவறு என்று பேசவில்லை. ஜனநாயகத்தை மோடி காலில் போட்டு மிதிக்கிறார். மோடிக்கு எதிராக ஒரு கருத்து சொன்னால் அது இந்தியாவிற்கு எதிராக சொல்லப்பட்ட கருத்து என்று பாரதிய ஜனதா சொல்கிறது. பாரதிய ஜனதாவின் தன்மை அப்படி இருக்கிறது. அது ஒரு சர்வாதிகாரம்.

குரல்வளையை நெறிக்கிறது
மோடியின் செயல்பாடுகள் சரியில்லை. பாஜக செயல்பாடுகள் சரியில்லை என்று சொன்னால் உடனே பாஜக சொல்கிறது.. இந்தியாவிற்கு விரோதமாக பேசுகிறீர்கள். இந்திய தேசத்திற்கு விரோதமாக பேசுகிறீர்கள் என்று சொல்கிறார்கள். அது எப்படி இந்தியாவிற்கு பேசியதாக ஆகும்? ஜனநாயகத்தின் குரல்வளையை பாஜக நெறிக்கிறது. நாடாளுமன்றத்தை முடக்குவதே பாரதிய ஜனதா கட்சிதான். நாடாளுமன்றத்தில் ஒரு தரப்பை பேசவே விடமாட்டோம் என்பது நியாயமா?

ஜனநாயகத்தை பற்றி பேச
எங்களுடைய கோரிக்கை எல்லாம் ஜனநாயகத்தை பற்றி பேச அனுமதி வழங்க வேண்டும் என்பது மட்டுமே. ராகுல் காந்தி என்னை பேசவிடுங்கள். நான் பேசினேன் என்று சொல்கிறேன் என்றுதான் ராகுல் காந்தி கூறுகிறார். ராகுல் காந்தியை பேச விடுங்களேன். ஏன் அவ்வளவு பெரிய நாடாளுமன்றத்தில் ஒரு தனி மனிதர் பேசினால் நாடே சிதறிவிடப்போகிறதா.. நாடாளுமன்றம் அதை ஏற்றுக்கொள்ளாதா?

ராகுல் காந்தி பேசுவதை கேளுங்கள்
நீங்கள் மெஜாரிட்டியாக இருக்கிறீர்கள். ஏன் அச்சப்படுகிறீர்கள்.. அமைதியாக ராகுல் காந்தி பேசுவதை கேளுங்கள்.. எழுந்து பதில் சொல்லுங்கள். ஏன் சத்தம் போடுகிறீர்கள். இன்றைக்கு நாடளுமன்றத்தை முடக்குவதெ பாஜகதான். எதிர்க்கட்சிகளை பேச விடுங்கள்.. கேட்டு விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.. மக்கள் முடிவெடுப்பார்கள் யார் கருத்து சரியென்று ..அதுதானே நாடாளுமன்ற ஜனநாயகம்.

மாணவர்கள் தேர்வு எழுதாமல் இருப்பது
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது. மாணவர்கள் தேர்வு எழுதாமல் இருப்பது நமது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும். இதை நாம் அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது ஒரு சமூக பிரச்சினை 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என்றால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும்? ஒவ்வொரு தனி மனிதனை பற்றியும் கவலைப்படுவதுதான் ஜனநாயகம்.

மொபைல் போன் கொண்டுவர..
எனவே, தமிழ்நாடு அரசு இதில் மேலும் கவனம் செலுத்தி குழு ஒன்றை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களிடையே பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்துவது நம்முடைய கடமை. இந்த விவகாரத்தில், அரசுக்கு மட்டும் இல்லை பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர்களும், மாணவர்களுக்கு பள்ளிக்கு மொபைல் போன் கொண்டுவர தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications