சொன்ன தேதிக்கு முன்பே தமிழகம் வந்தார் ராகுல் காந்தி! நீலகிரி கூடலூரில் பேசப்போகும் விஷயம் இதுதானா?
சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார்.. 3 மணிக்கு நீலகிரி மாவட்டம் கூடலூர் வந்த ராகுல் காந்தி, அங்குள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பிரதான விருந்தினராக அவர் பங்கேற்க உள்ளார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி வரும் ராகுல் காந்தி, கூடலூரில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்..

ராகுல் காந்தி
இந்த விழா கல்வி, சமூக வளர்ச்சி மற்றும் மாணவர் முன்னேற்றம் குறித்த கருத்துகளை எடுத்துரைக்கும் மேடையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மைசூருக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கூடலூர்-மைசூர் சாலையில் உள்ள மார்தோமா நகர் பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு தரையிறங்கினார் ராகுல்காந்தி .. அதன் பிறகு பாதுகாப்புடன் காரில் புறப்பட்டு பொன்விழா நடைபெறும் பள்ளிக்கு சென்று விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்..
நாட்டின் கல்வி கொள்கைகள்
விழா மேடையில் பள்ளியின் கல்விச் சேவை, ஆசிரியர்களின் பங்கு, மாணவர்களின் எதிர்காலம் மற்றும் நாட்டின் கல்வி கொள்கைகள் குறித்து அவர் பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நிறைவடைந்ததும், ராகுல் காந்தி கூடலூரிலிருந்து கேரள மாநிலம் திருச்சூர் நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு கூடலூர் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்புக்கு தயாராக உள்ளனர்..
மார்தோமா நகர் மைதானத்திலிருந்து விழா நடைபெறும் பள்ளி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டு வந்து பதாகைகள், கொடிகள் ஏந்தி சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய உறுப்பினரும், தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளருமான கோசி பேபி தலைமையில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி கூடலூர்
மேலும், ராகுல் காந்தி வருகையையொட்டி கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும், போக்குவரத்து ஒழுங்குமுறை, பாதுகாப்பு சோதனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி ஜனவரி 28ம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே இன்று கூடலூரில் நடைபெறும் பள்ளி பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்..
முன்னதாக ராகுல் காந்தியை வரவேற்க மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொள்ள ஏழு பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அமைத்துள்ளார்.
நேற்று மாலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி கூடலூரில் கலந்துகொள்வது முழுக்க முழுக்க பள்ளி நிகழ்ச்சி, இதில் அரசியல் கலப்பு இல்லை, தனியார் பள்ளி விழாவிலும், சமத்துவ பொங்கல் விழாவிலும் கலந்துகொள்ள உள்ளார்.. இதன்மூலம் கல்வி மற்றும் சமூக ஒற்றுமை குறித்த செய்தி வலுவாக வெளிப்படும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications