Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லி 'கை'க்கும் சென்னை 'உதயசூரியனு'க்கும் இடையே ஏதோ உரசல்கள் புகைந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. ராகுல் - ஸ்டாலின் இடையிலான கருத்து வேறுபாடு உச்சம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ராகுல் காந்தி வந்திருந்தார். அதே நாளில், கூட்டணிக் கட்சிகளுக்காக முதல்வர் ஸ்டாலினும் புதுச்சேரியில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார். "ஒரே மேடையில் ராகுலும் ஸ்டாலினும் கைகோத்தால் அது தேசிய அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும்" என உடன்பிறப்புகள் போட்ட கணக்குதான் இப்போது தடம் புரண்டு நிற்கிறது.

tamil nadu assembly elections 2026 congress

"காலையிலோ அல்லது மாலையிலோ ஒரே மேடையில் ராகுல் காந்தியுடன் இணைந்து பிரசாரம் செய்யத் தயாராக இருக்கிறோம், நேரம் ஒதுக்குங்கள்" என தி.மு.க தரப்பிலிருந்து ராகுல் டீமிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாம். ஆனால், ராகுல் காந்தி தரப்பிலிருந்து வந்த பதிலோ செம ஷார்ட் அண்ட் ஷார்ப். "டைம் இல்லை" என்பதே அந்தப் பதில். கூட்டணித் தலைவரான ஸ்டாலினுக்கே ராகுல் 'நோ' சொன்னது அறிவாலய வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அப்செட்

தி.மு.க-வைப் பொறுத்தவரை தமிழகத்தில் காங்கிரஸைக் கைகொடுத்துத் தூக்கிவிடுகிறோம் என்கிற நினைப்பில் இருக்க, ராகுலோ புதுச்சேரி விவகாரத்தில் ஸ்டாலினைச் சற்று தள்ளியே வைக்க விரும்புகிறாரோ என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக, புதுச்சேரி காங்கிரஸின் கோட்டை என்பதை நிரூபிக்க ராகுல் துடிப்பதாகவும், அங்கே தி.மு.க-வின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதை அவர் ரசிக்கவில்லை என்றும் டெல்லி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. 'ராகுல் காந்தி மெல்ல மெல்ல தி.மு.க-வுக்கு எதிராகத் திரும்புகிறாரா?' என அரசியல் விமர்சகர்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.

ஸ்டாலினும் ராகுலும் ஒரே நாளில் புதுச்சேரியில் இருந்தும், முகத்துக்கு முகம் கூடப் பார்த்துக்கொள்ளாமல் தனிதனியாகப் பிரசாரம் செய்துவிட்டுத் திரும்பியது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. "நாங்கள் கேட்டது ஒரு மணிநேரம், அவர் சொன்னதோ நோ டைம்" என தி.மு.க நிர்வாகிகள் புலம்ப, "ராகுல் ஒரு தேசியத் தலைவர், அவருக்குப் பல வேலைகள் இருக்கும்" என காங்கிரஸார் மழுப்புகிறார்கள்.

இந்த 'ஈகோ' யுத்தம் வரும் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா அல்லது வெறும் பிரசார சலசலப்போடு நின்றுவிடுமா என்பதுதான் இப்போதைய மில்லியின் டாலர் கேள்வி. தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட அனலை எட்டியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலின் போது காட்டிய வேகத்தை, சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெளிப்படுத்தவில்லை என்று கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

கூட்டணியால் திமுகவை காங்கிரஸ் கிட்டத்தட்ட கைகழுவிவிட்டதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. காங்கிரஸ் களத்திற்கே வரவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

டெல்லிக்கும் தமிழகத்திற்குமான தூரம்!

வழக்கமாக நாடாளுமன்றத் தேர்தல் என்றால், ராகுல் காந்தி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வலம் வருவார். திடீரென சாலையில் நடப்பது.. வில்லேஜ் குக்கிங் சேனலில் பேசுவதுதொடங்கி.. கார் மெக்கானிக் ஷெட்களில் உரையாடியது வரை ராகுலின் வருகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், தற்போதைய சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தியோ அல்லது டெல்லி காங்கிரஸின் முக்கியத் தலைவர்களோ இதுவரை தமிழகத்தின் பக்கம் தலை காட்டவில்லை. அண்டை மாநிலமான புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய ராகுல், தமிழகத்திற்குள் இன்னும் நுழையாதது திமுக தரப்பிலும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

தேர்தல் களத்தில் 'மிஸ்ஸிங்' ஆகும் காங்கிரஸ்!

திமுக மற்றும் அதன் மற்ற கூட்டணிக் கட்சிகள் தொகுதிப் பங்கீடு முடிந்த கையோடு, வேட்பாளர் அறிமுகம் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்களில் வேகம் காட்டி வருகின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளிலும் இன்னும் தேர்தல் களம் சூடுபிடிக்கவில்லை என்பதே எதார்த்த நிலவரம். வேட்பாளரை அவர்கள் அறிவித்ததே கடைசியாகத்தான். அதிலும் மேலூர் வேட்பாளரை மிக தாமதமாகவே அறிவித்தனர்.

கிரவுண்ட் ஒர்க்: தொகுதிப் பகுதிகளில் வாக்குச் சேகரிப்புப் பணிகளில் திமுகவினரே முன்னின்று செயல்படும் சூழல் நிலவுகிறது. காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்களின் பங்களிப்பு களத்தில் மிகக் குறைவாகவே தென்படுகிறது. காங்கிரஸ் திமுக இடையிலும் உறவு மிக மோசமாக உள்ளது. களத்தில் இரண்டு தரப்பிற்கும் இடையில் பெரிய நட்பு இல்லை.

விஜய் ஃபேக்டர்: தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை இளைஞர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை எதிர்கொள்ளத் தேவையான தீவிரப் பிரச்சார யுக்திகளை காங்கிரஸ் இன்னும் வகுக்கவில்லை.

முக்கியத் தலைவர்களின் மௌனம்: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத் தலைவர்கள் பலரும் பொதுக்கூட்டங்களை விட, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் ஆலோசனைக் கூட்டங்களிலேயே அதிக நேரம் செலவிடுவதாகப் புகார் எழுந்துள்ளது. சிலருக்கு திமுகவை மறைமுகமாகி திட்டி சோஷியல் மீடியாவில் போஸ்ட் போடக்கூட நேரம் இருக்கிறது. ஆனால் பிரச்சாரம் செய்ய நேரமில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

அறிவாலயத்தின் அதிருப்தி?

"லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தி நாங்கள் வாக்குச் சேகரித்தோம். அவரை ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக முதல் ஆளாக அறிவித்தார். ஆனால், சட்டமன்றத் தேர்தலில் எங்கள் வெற்றிக்காக டெல்லித் தலைவர்கள் உழைக்கத் தயங்குவது ஏன்?" என்பதுதான் உடன்பிறப்புகளின் தற்போதைய குமுறல். சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி காட்டும் இந்த மெத்தனப் போக்கு, வாக்கு எண்ணிக்கையின் போது எதிரொலிக்குமோ என்ற அச்சம் கூட்டணி மேலிடத்திற்கும் எட்டியுள்ளது.

சத்தியமூர்த்தி பவன் 'சில்' என்று இருந்தாலும், தேர்தல் களம் 'ஹாட்' ஆக இருக்கிறது. ராகுல் காந்தியின் வருகை தள்ளிப்போகும் ஒவ்வொரு நாளும், அது எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக மாறிவிடும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கணிப்பு. காங்கிரஸ் கட்சி தனது 'கூலிங்' மோடை மாற்றிவிட்டு, களத்தில் இறங்கினால் மட்டுமே கோட்டை நோக்கிய பயணம் சுமூகமாக அமையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+