ரயில்வே ஊழியருக்கு வந்த திடீர் சந்தேகம்.. இது யாருக்கு பிறந்த குழந்தை.. மனைவி தந்த அதிர்ச்சி பதில்
சென்னை: பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... கணவரின் டார்ச்சரை பொறுத்து பொறுத்து பார்த்த ஒரு பெண்ணால், ஒரு அளவுக்கு மேல் அந்த கொடுமையை தாங்க முடியவில்லை.. இன்று அந்த பெண் எடுத்த ஒற்றை முடிவால், அவரது குடும்பமே நிலைகுலைந்து நிற்கிறது.. தெலுங்கானா மாநிலத்தை உலுக்கியெடுத்துள்ள அந்த செய்தி இதுதான்...!!
தெலுங்கானா மாநிலம் யாதாத்திரி புவனகிரி மாவட்டம் கொள்ளகூடம் கிராமத்தை சேர்ந்தவர் 28 வயது ஐஸ்வர்யா.. ரயில்வேயில் டிராக்மேனாக பணியாற்றி வரும் மேகல மகேஷ் என்பவருக்கும், ஐஸ்வர்யாவுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது..

ரயில்வே ஊழியர்
இவர்களுக்கு ஜான்சி (2) என்ற பெண் குழந்தையும், பண்டு என்ற பத்து மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.. ஆரம்பத்தில் தம்பதி இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்க்கையை துவங்கி உள்ளனர்..
ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு மகேஷ் தகராறு செய்ய துவங்கி உள்ளார்.. அப்போது ஐஸ்வர்யா 2 மாத கர்ப்பிணியாக இருந்தார்.. கணவரின் சந்தேக சொற்களை தாங்க முடியாமல், தனது முதல் குழந்தை ஜான்சியை அழைத்து கொண்டு, தன்னுடைய அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார்..
அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.. ஆனால், தந்தை என்ற முறையில் மகேஷ் ஒருமுறை கூட வந்து குழந்தையை பார்க்கவில்லை என்பதுதான் பெரும் சோகம்..
சந்தேக கணவருக்கு மனைவி பதில்
இந்நிலையில், உறவினர்கள் தலையிட்டு சமாதானம் செய்ததை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஐஸ்வர்யா தனது புகுந்த வீட்டிற்குத் திரும்பினார்..
ஆனால், ஐஸ்வர்யா சென்ற தினத்தன்று கணவர் மகேஷ் வீட்டில் இல்லை.. மாமனார் நரசிம்மா மற்றும் மாமியார் சத்தம்மா மட்டுமே இருந்துள்ளனர்.. அன்றிரவு அனைவரும் தூங்க போய்விட்டார்கள்.. மறுநாள் காலையில் சத்தம்மா மருமகளின் ரூம் கதவை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து போனார்.. ஐஸ்வர்யா ஃபேனில் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருந்தார்.. அருகில் அவரது 2 பிஞ்சு குழந்தைகளும் சலனமற்று படுக்கையில் பிணமாகக் கிடந்தனர்..
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்தனர்.. அப்போது ஐஸ்வர்யா எழுதி வைத்திருந்த உருக்கமான தற்கொலை கடிதங்களை மீட்டனர்..
உருக்கமான கடிதங்கள்
அதில், "என் மரணத்திற்கு கணவர் மகேஷ், மாமனார், மாமியார் மற்றும் மைத்துனிகள் தான் காரணம்.. மாமியார் வீட்டில் கொடுமை தாங்க முடியாமல் தான் என் பிள்ளைகளை கொன்றுவிட்டு நானும் சாகிறேன்... என் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் இருந்தால், என் மகனின் டி.என்.ஏ-வை பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்" என்று ஆவேசத்துடன் எழுதி வைத்திருந்தார்..
பிறகு தன்னுடைய அப்பாவுக்கு ஐஸ்வர்யா எழுதிய மற்றொரு கடிதத்தில், "அப்பா, மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் உங்களுக்கு மகனாக பிறக்க ஆசைப்படுகிறேன்.. உலகில் பெண்ணாகப் பிறப்பதும் வாழ்வதும் ரொம்ப கஷ்டமானது..
வரதட்சணை கொடுமை
மாமியார் வீட்டார் நீங்கள் கொடுத்த 32 லட்சம் வரதட்சணை மற்றும் 30 சவரன் தங்கத்தை மட்டும்தான் பார்த்தார்கள்.. அதற்காகத்தான் என்னை திருமணம் செய்தார்கள்" என்றெல்லாம் தன்னுடைய குமுறலை கொட்டி எழுதியுள்ளார் ஐஸ்வர்யா..
இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. எனினும், புகுந்த வீட்டின் வரதட்சணை கொடுமையும், கணவனின் சந்தேகப் பார்வையும் ஒரு தாயை தன் பிள்ளைகளையே கொல்லும் அளவிற்கு இன்று தள்ளியுள்ளது கொடுமையின் உச்சமே...!!












Click it and Unblock the Notifications