அதென்ன “புஷ் புல்”.. ஏழைகளுக்காக ரெடியாகும் வந்தே பாரத் ரயில்! இனி குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்
சென்னை: வந்தே பாரத் ரயில் சேவைக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ள அதிகளவிலான கட்டணத்தால் எளிய மக்கள் அதில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ள நிலையில் புஷ் புல் என்ற பெயரில் எளிய மக்களுக்கான ரயில் சேவையை ரயில்வே அமைச்சகம் தொடங்க உள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு ரயில் வழித்தடங்களில் அதிவிரைவு சொகுசு ரயிலை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. தமிழ்நாட்டில் சென்னை - கோவை, சென்னை - பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர்24 ஆம் தேதி 9 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார். அதில் திருநெல்வேலி - மதுரை - சென்னை இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் மற்றும் சென்னை - ஆந்திர மாநிலம் விஜயவாடா இடையேயான வந்தே பாரத் ரயிலும் அடக்கம்.

ஆனால், இந்த வந்தே பாரத் ரயிலில் வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை விட பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை எளிய மக்கள் அதிகம் வாழும் நாடான இந்தியாவில், வந்தே பாரத் ரயில் சேவை என்பது உயர் நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினரால் மட்டுமே எளிதில் பயன்படுத்தும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் தான் மத்திய ரயில்வே துறை ஏழை எளிய மக்களும் வந்தே பாரத் ரயில் சேவையை பயன்படுத்தும் வகையில் புதிய முயற்சியை எடுத்து வருகிறது.
இந்த ரயில் சேவையின் பெயர்தான் புஷ் புல். அக்டோபர் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கும் இந்த புஷ் புல் ரயிலுக்கான பிரத்யேக லோகோ பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதுவும் நமது சென்னை பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலையில்தான் இதை தயாரித்து வருகிறார்கள். மேற்கு வங்க மாநிலம் சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் வொர்க்ஸ் தொழிற்சாலையில் இதற்கான எஞ்சின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
First look of the Push-Pull loco
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 11, 2023
Noisy, oily, power generator coaches will not be needed once these push-pull locos are installed at both ends of trains.
On my Whatsapp Channel👇https://t.co/WEykjP6Byb
ஏழை மக்களும் அதிவேக ரயில் சேவையை பயன்படுத்துவதற்காக கொண்டு வரும் இந்த புஷ் புல் ரயில், இரு புறம் மின்சார எஞ்சின் மூலம் இயங்கும் வகையிலானது. மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று புஷ் புல் ரயிலின் லோகோ புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், "புஷ் புல் ரயிலின் லோகோ தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. புஷ் புல் ரயிலின் லோகோ 2 முனைகளிலும் இணைக்கப்பட்ட பிறகு அதிகளவில் பவர் ஜெனரேட்டர் தேவைப்படாது." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications