கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி தாமதம்.. தமிழக அரசுக்கு ரயில்வே பரபரப்பு கடிதம்
சென்னை: சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. ஆனால் பேருந்து நிலையத்தை திட்டமிடும் போதே, கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையத்தையும் திட்டமிட்டிருக்க வேண்டும். அரசு கையோடு அந்த பணிகளை செய்யவில்லை.. பேருந்து நிலையம் திறந்த பின்னரே, கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் தொடங்கியது. தற்போது ரயில் நிலைய பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் கட்டுமானத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தி தர வேண்டும் என தமிழக அரசுக்கு தெற்கு ரயில்வே கடிதம் அனுப்பியுள்ளது.
சென்னை மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடியில் புதிய பேருந்து நிலையத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு கட்ட தொடங்கியது. இந்த பணிகள் ஐந்து ஆண்டுகளை தாண்டி நடந்து வந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. தினமும் ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். கிளாம்பாக்கத்தை பொறுத்தவரை பேருந்து நிலையத்தின் எதிரிலேயே ரயில் பாதை செல்கிறது.

ஆனால் ரயில் நிலையம் அமைக்கப்படவில்லை.. வண்டலூர் ரயில் நிலையமும், ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகருகே உள்ளன. இது கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தூரம் என்பதால் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டுமென பேருந்து நிலையம் கட்டும் போதே கோரிக்கை எழுந்தது.
ஆனால் இந்த பணிகள் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்த பின்னரே ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் வண்டலூர்-ஊரப்பாக்கம் இடையே ரூ.20 கோடி மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் இருந்து கணக்கிட்டால். 500 மீட்டர் தூரத்தில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. 3 நடைமேடைகள், நிலைய மேலாளர் அறை, பார்க்கிங் வசதி, டிக்கெட் அலுவலகம், கண்காணிப்பு கேமராக்கள், நடைமேம்பாலம், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டிருக்கிறது. ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக பணிகள் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் மீண்டும் பணிகள் வேகமெடுத்தது. மார்ச் மாத இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் ரெயில் நிலைய பணிகளை முடிப்பதில் மீண்டும் இழுபறி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ரயில் நிலையத்தின் முகப்பு பகுதி மற்றும் நடைமேம்பாலம் அமைப்பதற்கான இடங்களை மாநில அரசு தரப்பில் கையகப்படுத்தி தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே சார்பில் தமிழக அரசுக்கு சமீபத்தில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த கடிதத்தில், ரயில் நிலைய பணிகளை விரைந்து முடிக்க தெற்கு ரெயில்வேக்கு தேவையான இடங்களை கையகப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதுபற்றி அதிகாரிகள் கூறும் போது, கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்து உள்ளது. தற்போது நடைமேடை, சுற்றுச்சுவர்கள், மின் இணைப்பு, மேற்கூரை அமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிவடைய வாய்ப்பு உள்ளது. இதேபோல, ரயில் நிலையத்தின் முகப்பு பகுதி அமைவிடம், நடை மேம்பாலம் அமைப்பதற்கு தேவையான இடங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த இடங்களை கையகப்படுத்தி விரைவாக வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். நிலத்தை கையகப்படுத்தி வழங்கும் பட்சத்தில் பணிகள் விரைவாக முடிவடையும். அதன்படி, வரும் ஜூலை மாத இறுதிக்குள் ரயில் நிலையப் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறோம் எனறு கூறினார்கள்.












Click it and Unblock the Notifications