சென்னையில் வரலாற்று சிறப்பு..ஒரே இரவில் 3 மடங்கு கொட்டித்தீர்த்த மழை..காரணம் கூறும் வெதர்மேன்
சென்னை: சென்னை பகுதிகளில் ஒரே இரவில் 3 மடங்கு மழை பெய்துள்ளது. மழையானது 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் தனியால் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சிறப்பு மிக்க மழை பெய்துள்ளதாகவும் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு மழையால் ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்துள்ளதாகவும் பிரதீப் ஜான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் ஜூன் மாதத்தில் மழை பெய்வது அரிதானது. சனிக்கிழமை வரை வெப்பநிலை 105 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவான நிலையில் ஞாயிறன்று ஒரே நாளில் பலத்த காற்றுடன் இடி மின்னலுமாய் மழை பெய்துள்ளது. இதனால் சென்னையின் வானிலையே மாறியுள்ளது.
கனமழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14 செமீ மழை பதிவாகியுள்ளது. தரமணி, நங்கநல்லூரில் 12 செமீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளது. வெயிலின் கொடுமையால் அனல் காற்றை அனுபவித்த சென்னைவாசிகள் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையில் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

பெருங்குடி, பழைய மகாபலிபுரம் சாலையில் வெள்ளநீர் சாலைகளில் இரண்டு அடிக்கு மேல் தேங்கியுள்ளது. இந்த மழைக்கு காரணம் என்ன என்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
ஜூன் மாதத்தில் பெரிய மழை மாதம் கிடையாது. சராசரியே 50 முதல் 60 மில்லி மீட்டர்தான். ஆனால் 1991ஆம் ஆண்டு 150 மிமீ மழை ஜூன் மாதத்தில் மழை பெய்தது. அதே போல 1996ஆம் ஆண்டு புயல் காரணமாக ஜூன் மாதத்தில் அதிக மழை பெய்தது.
பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு திசையில் இருந்து காற்று வீசும். அப்போ கடல் பகுதியில் இருந்து கிழக்கு திசையில் இருந்து மேகங்கள் எல்லாம் வராது. ஆனால் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழை போல நேற்றிரவு முதல் மழை பெய்துள்ளது.
குஜராத்தில் புயல் கரையை கடந்த காரணத்தால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விட்டது. இதனால் கேரளாவில் இன்னும் பெரிய அளவில் பருவமழை பெய்யத் தொடங்கவில்லை. தென்மேற்கு பருவமழை மந்தமாகவே காணப்படுகிறது. அரபிக்கடல் பகுதியிலும் பெரிய அளவில் காற்றழுத்தம் உருவாகவில்லை. தற்போது வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் மேகங்கள் உருவாவது போல கிழக்கு திசையில் இருந்து மேகங்கள் உருவாகி மழை பெய்துள்ளது. நேற்றைய தினம் சென்னை பகுதிகளில் ஒரே இரவில் 3 மடங்கு மழை பெய்துள்ளது. மழையானது 3 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தென் சென்னை பகுதிகளில் ஆலந்தூர், கிண்டி, பெருங்குடி உள்ளிட்டதென்சென்னை பகுதிகளில் 150 மில்லிமீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. ஒரு மாதத்திற்கே நமக்கு 50 முதல் 60 மில்லி மீட்டர் அளவுதான் மழை பதிவாகும். நேற்றைய தினம் ஒரே நாளில் சில மணி நேரங்களில் அதிகமாக மழை பெய்துள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கு விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச மழையை எதிர்பார்க்க முடியாது என்றும் பிரதீப் ஜான் கூறியுள்ளார். கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளிலும் 24ஆம் தேதிக்கு மேல்தான் மழை தொடங்க வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் மழை தாமதமாவதால் வட மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும். இனி மேல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை எல்லாம் பதிவாக வாய்ப்பு இல்லை என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதனிடையே பிரதீப் ஜான் தனது முகநூல் பதிவில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சிறப்பு மிக்க மழை பெய்துள்ளது. ஜூன் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு 150 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
1991, 1996 க்கு பிறகு இப்போது 2023 ல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வரலாற்று சிறப்புமிக்க மழை கிடைத்துள்ளது. வெப்ப அலைகளுக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. 1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெய்த மழையால் பள்ளிகளுக்கு ஒருவாரம் விடுமுறை கிடைத்தது. 1996ஆம் ஆண்டுக்கு பிறகு இன்றைய தினம் ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்துள்ளதாகவும் வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications