வெடிகுண்டுகளுடன் உள்ளே நுழைய முயன்று தப்பிவிட்டனர்.. ஆளுநர் மாளிகை பதிவால் ஷாக்! போலீஸ் சொன்னதே வேற!
சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
ஆளுநர் மாளிகை, எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகலில் திடீரென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மர்மநபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றார். அவரை அங்கிருந்த போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன,
அதோடு கைதானவரின் பெயர் கருக்கா வினோத் என்பதும், இவர் ஏற்கனவே சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி கைது செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. மேலும் அந்த வழக்கில் சிறை சென்ற அவர் சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்ததும், இதையடுத்து இன்று அவர் ஆளுநர் மாளிகையை நோக்கி பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியவந்தது.

சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பத்திரிகையாளர்களை சந்தித்து இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, "நண்பகல் 3 மணிக்கு சர்தார் படேல் சாலையில் தொியாத நபர் ஒருவர் ராஜ்பவன் கேட் பக்கத்தை குறிவைத்து பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வீச முயற்சித்தார். அப்போது பாதுகாப்பிற்கு இருந்த காவலர்கள் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். இருப்பினும் அந்த நபர் ஒரு பாட்டிலை வீசினார். அது உடைந்து போனது. அதில் இருந்து எந்தவிதமான தீயும் வரவில்லை.
கைது செய்யப்பட்ட நபரிடம் சில பாட்டில்கள் இருந்தன. அது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்தார் படேல் சாலையில் தான் சம்பவம் நடந்துள்ளது. அங்கு தான் பாட்டில் விழுந்துள்ளது. யாரும் பாதிக்கப்படவில்லை. எந்தவித சேதமும் ஏற்படவில்லை. அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் பெயர் கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. சமீபத்தில் அவர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். காலை 10-12 மணிக்குள் மதுபானம் குடித்துள்ளார். அவர் நிதானமாக இல்லை. அவரை கைது செய்துள்ளோம்." என்றார்.

மேலும், "ஒரே ஒரு பாட்டில் வீசப்பட்டுள்ளது. 3 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர் நடந்து வந்து தான் இதில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தின்போது திரியில் மட்டுமே தீ இருந்தது. ஆளுநர் மாளிகையின் மெயின் வாயிலில் வைக்கப்பட்டுள்ள தடுப்புக்கு முன்பாக சர்தார் வல்லபாய் படேல் சாலையில் தான் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் விழுந்தது." எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில், ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர் என்றும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ரௌடி கருக்கா வினோத் குடிபோதையில் இருந்ததாகவும், ஒரே ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் தெரிவித்த நிலையில், விஷமிகள், ஆளுநர் மாளிகை பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றதாகவும், காவலர்கள் தடுத்ததால், 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிவிட்டதாகவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications