ஆளை விடுங்க அஷ்வின்.. “ஹல்லா போல்.. மெல்லமா போல்”.. ட்ரோல்களால் ஆஃப் ஆன ராஜஸ்தான் ராயல்ஸ் கோஷம்
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த சில போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், அந்த அணி வீரர் அஷ்வின் "ஹல்லா போல்" என்ற தனது கோஷத்தை மாற்றி இருக்கிறார்.
தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே அஷ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஊழியரான தமிழ்நாட்டை சேர்ந்த ராஜாமணி என்பவருடன் இணைந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அதில் "ஹல்லா போல் கொஞ்சம் நல்லா போல் என்று பேசி வீடியோ தொடங்கும் அஷ்வினும் ராஜாமணியும் தங்கள் ஐபிஎல் அனுபவங்கள், ராஜஸ்தான் அணி குறித்த சுவாரஸ்ய தகவல்கள் என பலவற்றை பகிர்ந்து வருகிறார்கள். இந்த வீடியோவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனும் வந்திருக்கிறார். அதேபோல் மேற்கிந்திய வீரர் ஜேசன் ஹோல்டரும் அந்த வீடியோவில் வந்திருக்கிறார்.
இந்த ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து அஸ்வின் இவ்வாறு வீடியோ வெளியிட்டு வந்தது ஒரு கட்டத்தில் டிரெண்டானது. இந்த நிலையில், கடந்த சில போட்டிகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை அடைந்து வரும் நிலையில் அஸ்வின் வெளியிடும் வீடியோக்களும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன. சீரியல் நடிகர் ஒருவர் இதனை விமர்சித்து வெளியிட்ட வீடியோவும் அதிகளவில் பகிரப்பட்டு வந்தன.
குறிப்பாக நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 214 ரன்களை அடித்தும் கடைசி பந்தில் ஐதராபாத் அணி வீரர் அப்துல் சமத் அடித்த சிக்சரால் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் அஸ்வின் ராஜாமணியுடன் சேர்ந்து மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அவர் அவர் பேசி இருப்பதாவது, "ஹல்லா போல் கொஞ்சம் நல்லா போலுக்கு எல்லோரையும் வரவேற்கிறோம்.
ராஜாமணி 10 பாயிண்டிலேயே தங்கி இருக்கிறோம். அங்கேயே உறங்கி இருக்கிறோம். அங்கேயே சமைக்கிறோம். அங்கேயே படுக்கிறோம். அங்கேயே படுக்கிறோம்." என்றார். அப்போது ராஜாமணி, "கொஞ்சம்தான் நமது மக்களின் ஆதரவை கேட்டோம். ஆனால், ரொம்ப ட்ரோல் செய்வதுபோல் உள்ளது." என்றார்.

உடனே அஷ்வின், "மனம் வருத்தப்பட்டுட்டீங்களா? அப்படியெல்லாம் வருத்தப்படாதீங்க. நம் மீது அதிக பாசம் வைத்து இருப்பவர்கள்தான் நம்மை அதிகம் கிண்டல் செய்வார்கள். கிண்டல் என்றால் அவர்கள் நினைப்பதை சொல்கிறார்கள். முன்பெல்லாம் ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியை பார்த்து யாருமே கருத்து சொல்ல மாட்டார்கள்.
இப்போது குறைந்தபட்சம் கிண்டலாவது செய்கிறார்களே? எனது அப்பா என்னை தொடர்புகொண்டு, என் இதயம் பலவீனமாக இருக்கிறது. நீங்கள் ஜெயிப்பதைபோலவே போகிறீர்கள். ஜெயிக்கிறதே இல்லை. அடுத்த முறை ஜெயிப்பதாக இருந்தால் மட்டும் சொல்லு. என சொல்லி இருக்கிறார். இப்போதைக்கு நாங்கள் ஜெயிக்கவில்லை.
அதனால் ஹல்லா போல்.. நல்லா போல் எல்லாம் வேண்டாம். ஹல்லா போல் மெல்லமா போல். கொஞ்ச நாளைக்கு சுமாரா போல்." என்று பேசி உள்ளார். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடு 5 போட்டிகளில் வெற்றி, 6 போட்டிகளில் தோல்வி என மொத்தம் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications