அப்பாவிடம் சொல்லி இதை செய்வீங்களா.. உதயநிதிக்கு ராஜேஸ்வரி பிரியாவிடம் இருந்து வந்து விழுந்த கேள்வி
சென்னை: 100 நாட்களில் 1 கோடி பெண்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி கையெழுத்து வாங்கி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென்று வலியுறுத்தினால் அவரது அப்பாவிடம் சொல்லி உதயநிதி டாஸ்மாக் கடைகளை மூட வைப்பாரா என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கேள்வி எழுப்பி உள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை அண்மையில் தொடங்கி வைத்தார்.

சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நடத்திய நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நீட் தேர்வுக்கு எதிரான இயக்கத்தில் தனது கையெழுத்தை பதிவு செய்தார்.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அணிகளின் மாநில நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி கழக, பேரூர் கழக செயலாளர்கள் இந்த பணிகளை செய்து வருகிறார்கள். 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் வகையில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.
மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரி வாயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முகாம் அமைத்து டிஜிட்டலில் கையெழுத்து பெறும் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை 8 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினின் இந்த முயற்சியை பாஜகவும் மற்ற எதிர்க்கட்சிகளும் தமிழகத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "100 நாட்களில் 1 கோடி பெண்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி கையெழுத்து வாங்கி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென்று வலியுறுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்தால் அவரது தந்தை ஸ்டாலின் அவர்களிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் கடைகளை மூட வைப்பாரா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் தமிழகத்தில் மூட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பூர்ண மதுவிலக்கு என்று திமுக பிரச்சாரம் செய்த நிலையில், 2021ல் படிப்படியாக மதுவிலக்கு என்று தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், டாஸ்மாக்கை மூட அரசுக்கு மனம் இல்லை என்றும் குற்றம்சாட்டுகின்றன.












Click it and Unblock the Notifications