தென்னை மரத்தில் ஒரு குத்து; பனை மரத்திலும் ஒரு குத்து! ரஜினியின் அரசியல் ஆட்டம்!
சென்னை: மு.கருணாநிதி நினைவிடத் திறப்பு விழாவுக்கு ரஜினியை அழைத்தது உபிகள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ராமர் கோயில் திறப்புவிழாவில் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். அதைப்போலவே சில நாள்கள் முன்னதாக சசிகலா புதிய வீடு கிரஹபிரவேச விழாவில் கலந்து கொண்டார். இப்போது கலைஞர் நினைவிட விழாவிலும் கலந்து கொண்டுள்ளார் ரஜினி.

ஒரே நபர் மூன்று விதமாக வேறுவேறு கொள்கைகள் கொண்ட விழாக்களில் பங்கேற்க அழைக்கப்படுவது அரிதான செயல். அவரை போயஸ் கார்டன் பகுதிவாசியாக சசிகலா அவரது புதுமனை புகுவிழாவுக்கு அழைத்துள்ளார் என்பதில் வியப்பில் இல்லை.
ஆனால், அவர் கிட்டத்தட்ட சசிகலா வீட்டுக்கு ஒரு ஸ்பெஷல் விருந்தாளியாகவே அழைக்கப்பட்டிருந்தார். அவர் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக சசிகலாவுடன் உரையாடி இருக்கிறார். சசிகலாவும் வீட்டு வாசல் வரை வந்து ரஜினியை வழி அனுப்பி வைத்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம், 'சசிகலாவின் வீடு கோயில் போல உள்ளது' என்று தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். ரொம்ப நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தீர்கள், இந்தச் சந்திப்பின் முக்கியத்துவம் என்ன என்று கேட்டதற்கு அந்தப் பதிலைச் சொன்னார் ரஜினி. அதில் ஒருகுறையும் இல்லை.

கூடவே 'இந்த வீடு அம்மாவுக்குப் பேர், புகழ், நிம்மதி, சந்தோஷம் எல்லாம் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்வதாக' சொன்னார். சசிகலா தனது வீட்டிற்கு ஜெயலலிதா இல்லம் என்றே பெயர் வைத்துள்ளார். அரசியலில் ஜெயலலிதா வெற்றிடத்தை யார் நிரப்புவார்கள் என்று கேள்விக்கு அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.
அதைப்போலத்தான் ராமர் கோயில் திறப்பு விழாவுக்குச் சென்றவர் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொல்லிவிட்டு பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதில் சொல்லத் தொடங்கினார். மேலும் 'வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளில், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவில் நான் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை நான் பாக்கியமாகக் கருதுகிறேன்' என்றார்.
அவர் ராமர் கோயில் திறப்பு விழாவில் உரிய மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்றும் ஒரு வீடியோ பதிவு உலாவந்தது. இதை எல்லாம் கடந்து அவர் விழாவில் கலந்து கொண்டதே சர்ச்சையானது.
ஏறக்குறைய மறு ஜென்மம் எடுத்தவர் ரஜினி. அவரது உடல்நலம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியதற்காக அவர் பல தெய்வங்களுக்கு நன்றி சொல்லி வருகிறார். அதன் தொடர்ச்சியாகவே அவர் ராமர் கோயில் விழாவில் பங்கேற்றார்.
ஆனாலும் அதற்குள் ஒரு அரசியல் உள்ளது என்பதை அறியாதவர் அல்ல அவர். அதையும் புரிந்து கொண்டே அங்கே போகிறார். அவருக்கு அந்த அரசியல் மீது அதிக ஈடுபாடு உள்ளது.

அதை முடித்துவிட்டு, வந்தால் அவருக்கு 'லால் சலாம்' படமும் தேவையாக இருக்கிறது. ராமர் விழாவில் ஒரு பக்கம். லால் சலாமில் ஒரு பக்கம். அதாவது தென்னை மரத்துக்கும் ஒரு குத்து. பனை மரத்துக்கும் ஒரு குத்து. அதைப் புரிந்து கொண்டதால்தான் அவரது மகள் ஐஸ்வர்யா, 'அப்பா சங்கி இல்லை' என்று வான்டெட் ஆக வந்து கருத்து கூறுகிறார்.
அப்பாவை அவர் சங்கி இல்லை என்று சொன்னாலும் அவர் 'லால் சலாம்' விழாவில் அதிகம் ஆன்மிகம் என்ற பெயரில் கடந்த சில மாதங்களாகப் பேசப்பட்டு வரும் விஷயங்களுக்கு மறைமுகமாகப் பதிலளிக்கவே தனது முழு நேரத்தையும் எடுத்துக் கொண்டார். யார்
இங்கே சனாதனம் பற்றி விமர்சிக்கிறார்கள் என்பதை அவர் அறிவார். அவர்களுக்குத்தான் 'சனாதனா' பற்றி பாடம் நடத்துகிறார் லால் சலாம் விழாவில். அவருக்கு இந்த அரசியல் புரிகிறது. அதற்குத்தான் பதில் கொடுக்கிறார்.
இப்போது அப்படியே அதே சனாதன பதில் கொடுத்த கையோடு மு.கருணாநிதி நினைவிட விழா மேடையில் 'கருப்பு உடை'யுடன் வீரமணி பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். அதைப் பார்த்துத்தான் இப்போது திமுக உடன்பிறப்புகள் கொதிக்கிறார்கள்.

இவரை ஏன் விழாவுக்கு அழைக்க வேண்டும் என்கிறார்கள். பலரும் பக்கம் பக்கமாக சமூக வலைத்தளங்களில் காரசார விவாதம் செய்கிறார்கள். அதில், அதிகம் பேர் உபி ஆக இருக்கிறார்கள்.
இந்தச் சர்ச்சை பற்றி அறியாதவர் இல்லை ரஜினி. அவருக்கு எல்லா பக்கம் நண்பர்கள் இருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் ஜெயலலிதா ஆட்சி தொடர்ந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்றார். அதற்குப் பின்னால் அவரது மகள் திருமண விழாவுக்கு அழைப்பிதழை எடுத்துக் கொண்டு போய் ஜெயலலிதாவுக்கே கொடுத்தார். அதன்பின் ஜெயலலிதா, தன் வீட்டு விழாவில் பங்கேற்ற பிறகு நான் அவரை தவறாகப் புரிந்து கொண்டேன் என்பார்.
மு.கருணாநிதி உயிருடன் இருக்கும் போது திரை நட்சத்திரங்கள் அவருக்கு விழா எடுத்தார்கள். அப்போது 'கட்டாயப்படுத்தி எங்களை அழைத்து வருகிறார்கள் அய்யா' என்று அஜித் ஆவேசமாகப் பேசினார் எழுந்து நின்று கைதட்டுவார்.
அதே ரஜினிதான், கலைஞர் மறைந்தபோது எனது நண்பர் என்றார். இன்று கலைஞர் நினைவிடத்தை ஒரு தாஜ்மஹால் என்கிறார்.
விஜய்யைக் காக்கா என்பார். அதன்பின்னர் அவரை சொல்லவில்லை. அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பார். பின் அரசியல் கட்சி தொடங்கினால் அவருக்கும் தன் வாழ்த்து என்பார்.

படத்தில் 'உலகமே மாயா சாயா' என்பார். பணம் ஒரு விசயமே இல்லை. சந்நியாசம்தான் வாழ்க்கை என்பார். பிறகு நிஜ வாழ்க்கையில் 'அவார்ட் ஃபிலிம் நடிக்க மாட்டேன். அதில் காசு கிடைக்காது' என்று சைகை காட்டுவார். இப்படி எல்லாம் பண்ணால்தான் அவர் ரஜினி. அவரது பாணி, தென்ன மரத்தில் ஒரு குத்து. பனை மரத்திலும் ஒரு குத்து.
ஆனால், படத்தில் இந்த மாதிரி காமெடி பேசிய வடிவேலு, நிஜத்தில் உண்மையான அரசியல் பேசி தனது சினிமா வாழ்க்கையையே இழந்தார். அந்தளவுக்கு விவரம் தெரியாதவரா ரஜினி?













Click it and Unblock the Notifications