அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற ரஜினிகாந்த்.. எச்.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். எச்.ராஜா அண்மையில் ஊடக விவாத நிகழ்வின்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு சரிந்து விழுந்தார்.
பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடந்த ஜனவரி 30 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரால் நிற்கவே முடியாத சூழலில், அங்கு இருந்த அனைத்துக் கட்சி பிரமுகர்களும், ஊடக நிறுவனத்தினரும், அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஸ்கேன்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு அவரை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் எச்.ராஜா உடல்நிலை குறித்து நேற்று முன்தினம் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நலம் தேறி வருகிறது. அவர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். தனது உறவினர்கள், நண்பர்களுடன் பேசக் கூடிய நிலையில் அவர் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா குடும்பத்தினரை நேரில் சந்தித்து எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச். ராஜாவை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications