ஜெயலலிதா இல்லாவிட்டாலும் அவரது நினைவுகள் நிலைத்திருக்கும்! வேதா இல்லத்தில் ரஜினிகாந்த் புகழாரம்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அவருடைய போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். அவரை ஜெயலலிதாவின் மருமகள் தீபாவும் அவருடைய கணவர் மாதவனும் வரவேற்றனர்.
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகமெங்கும் அதிமுகவினரும் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் இன்றைய தினம் போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அந்த வகையில் தீபாவும் அவருடைய கணவர் மாதவனும் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி அவருடைய உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது அங்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தார். அவரை தீபாவும் மாதவனும் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கு பெங்களூர் புகழேந்தியும் இருந்தார். ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு ரஜினிகாந்த் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் தீபா, மாதவன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் வெளியே வந்த ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் கூறுகையில், 4 ஆவது முறையாக இந்த இல்லத்திற்கு வருகிறேன். 1977ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதற்கன ஒரு அழைப்பு வந்தது. அப்போது அவர்களை பார்ப்பதற்காக இந்த இல்லத்திற்கு வந்திருக்கிறேன். அதன் பிறகு ராகவேந்திரா திருமண மண்டபத்தின் திறப்பு விழாவிற்கு அழைக்க வந்திருக்கிறேன்.
மூன்றாவது முறை மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுக்க வந்தேன். இப்போது 4ஆவது முறையாக வந்திருக்கிறேன். ஜெயலலிதா இங்கு இல்லாவிட்டாலும் அவருடைய நினைவு அனைவர் மனதிலும் நிலைத்திருக்கும். அந்த இனிமையான நினைவுகளுடன் சென்று கொண்டிருக்கிறேன். அவர்கள் நாமம் எப்போதும் வாழ்க என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications