அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு இளையராஜா ஆடிய ஆட்டம் இருக்கே.. ரஜினிகாந்த் பகிர்ந்த சுவாரசியம்
சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் இசைஞானி இளையராஜாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், ரஜினிகாந்த் (Rajinikanth) இளையராஜா குறித்து சுவாரசியமான தகவலை பகிர்ந்தார். 'இரண்டு நாட்களுக்கு முன்பாக ரஜினிகாந்த் எனக்கு போன் செய்து சாமி நாம் இருவரும் மது அருந்திய கதையை சொல்லவா... என்று கேட்டு மிரட்டினார்', என்பதை நகைச்சுவையாக இளையராஜா குறிப்பிடார். உடனே அங்கே வந்த ரஜினி, மொத்த கதையையும் சொல்லி அரங்கில் சிரிப்பலையை உண்டாக்கினார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இளையராஜா பேசும் போது தனது இசைப் பயணம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு ஆடிய ஆட்டம்
அப்போது இளையராஜா பேசியதாவது:- ரஜினிகாந்த், எனக்கு இரண்டு நாள் முன்னாடி போன் பண்ணி, "நாம் பண்ணியதெல்லாம் நான் சொல்லப்போகிறேன்" என்றார். நாம் பண்ணியது என்னவென்றால்... பெல் பாட்டம் போட்டுட்டு, தொப்புளுக்கு மேல் பேண்ட் போட்டுக்கிட்டு, கிராப் வெட்டிக்கிட்டு, கையில் பட்டையா ஒரு வாட்ச் போட்டுட்டு... மகேந்திரனும், நீங்களும் (ரஜினி), நானும் உக்காந்து குடிச்சோம்.
ஸ்டூடியோவில் வந்து என்கிட்ட சொல்கிறார், "குடிச்சோம், நினைவு இருக்கா உங்களுக்கு?" என்று. "ஆமாம்... அப்புறம்... என்றெதுமோ, அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு ஆடிய ஆட்டம் இருக்கே, பாருங்கன்னு சொன்னாரு... அதை சொல்லப்போறேன்" என்று சொன்னார். "நீங்க என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கோங்க, அதைப் பற்றி எனக்கு கவலையில்லை" என்றார்.
இவ்வாறு இளையராஜா பேசிக்கொண்டிருக்கும் போதே, ரஜினி தனது இருக்கையில் இருந்து எழுந்து, இளையராஜா பேசிக்கொண்டிருந்த மைக் போடியம் வந்தார். உடனே மைக்கைப் பிடித்து பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது:-
மொத்த அரங்கமே குலுங்கி சிரித்தது
"விஜிபியில் ஜானி படத்திற்கான கம்போசிங் போய்க்கொண்டிருந்தது. இவர் (இளையராஜா), மகேந்திரன் வந்தாங்க. இரவில் நானும், மகேந்திரனும் டிரிங்க்ஸ் குடித்தோம். இளையராஜாவிடம் கேட்டோம், 'சாமி, என்னன்னு?'... ம்ம்ம் என்றார். பீர் அரை பாட்டில் அடிச்சிட்டு இவர் போட்ட ஆட்டம் இருக்கே... அய்யயோ, நைட் 3 மணி வரைக்கும்!
மகேந்திரன் அப்போ கேட்டார், 'இந்த சாங்... அப்படின்னது?' அப்போது இவர், 'சும்மா இருங்க சார்' என்று சொல்லிவிட்டு, ஊர்ல இருக்க கிசுகிசு எல்லாம் கேட்டார். மெயின் ஹீரோயின் பற்றி... அண்ணாம்பெரிய லவ்... அதான் இந்த பாட்டு எல்லாம்... அப்படி இருந்தவர்... இன்னும் நிறைய இருக்கும்... இன்னொரு வாட்டி நான் வச்சிக்கிறேன்" என்று ரஜினி சொன்னதுமே மொத்த அரங்கமே குலுங்கி சிரித்தது.
இளையராஜாவுக்கு பாராட்டு விழா
இசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யம் நடத்தி வரும் இளையராஜா, 1976-ம் ஆண்டு வெளியான 'அன்னக்கிளி' திரைப்படம் மூலம் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
லண்டனில் தனது கனவு படைப்பான 'வேலியண்ட்' சிம்பொனியை கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி நள்ளிரவு அரங்கேற்றி உலக சாதனை படைத்தார். இதற்காக இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி
இதை நிறைவேற்றும் வகையிலும், இசைப் பயணத்தில் 50 ஆண்டு பொன்விழாவையொட்டியும், சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை இளையராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications