சட்டசபைத் தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா? ஆதவுக்கான கண்டன ட்வீட்டை Decode செய்த அர்ஜுனமூர்த்தி
சென்னை: ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில் "காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" என கூறியிருப்பதன் அர்த்தம் என்ன என்பது குறித்து பாஜக மூத்த நிர்வாகி அர்ஜுனமூர்த்தி விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அர்ஜுன மூர்த்தி கூறியிருப்பதாவது: நான் எனது பதிவுகளில், ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து ஆர்வக் கோளாறான வேலைகளையே தொடர்ந்து செய்து வருகிறார். வயது, அனுபவம், நல்ல தலைமை பண்புள்ளவர், மக்களின் நேசத்தை சம்பாதித்த ரஜினியை இது போல் குறைத்து மதிப்பிட்டு பேசியிருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

ஆதவ்வின் கருத்துகள் மிகவும் கண்டிக்கத்தக்கது என நயினார் நாகேந்திரனும் தெளிவாக சொல்லிவிட்டார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அதுகுறித்து பதிவுகளை போட்டிருந்தார். தமிழக மக்களின் நேசத்துக்குரிய ரஜினி குறித்து இது போன்ற கருத்துகளை யார் சொன்னாலும் அதை ஏற்க மாட்டார்கள் என்பதுதான் வெளிப்படையாக தெரிகிறது.
இத்தனை கண்டனங்களுக்கு பிறகும், ஆதவ் மீது நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பது எனக்கு உடன்பாடில்லை. சினிமா துறையில் உச்சபட்சமாக இருக்கும் நடிகரை அதே சினிமா துறையில் இருப்பவரின் கட்சி நிர்வாகி குறைத்து மதிப்பிட்டு பேசுவது என்பது தவிர்க்க சொல்லியிருக்க வேண்டும்.
விஜய்யே ரஜினியிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆதவ் அர்ஜுனாவை கண்டித்திருக்க வேண்டும். மன்னிப்பை இருவரும் கேட்க மறுப்பதை பார்த்தால் வெகுஜன விரோத போக்கில் இருக்கிறார்கள் போல!
ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்துவிட்டு பிறகு அதிலிருந்து விலகியதற்கு யாருடைய மிரட்டலும் உருட்டலும் காரணம் இல்லை, கொரோனாதான் காரணம். கொரோனா மட்டும் குறுக்கே வராமல் இருந்திருந்தால் அவர் நிச்சயம் கட்சியை தொடங்கியிருந்திருப்பார். மிகப் பெரிய ஆளுமைக்கும் வந்திருந்திருப்பார்.
கொரோனா காலத்தில் மக்கள் உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் கட்சி தொடங்கவில்லை. தன்னால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வரக் கூடாது என்ற மிகப் பெரிய குணம் இருந்ததால்தான் அவர் தனது முடிவை கைவிட்டார்.
காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என ரஜினி ஏன் தெரிவித்திருக்கிறார் என்றால் அவருக்கு எப்போதும் பிரபஞ்ச சக்தி மீது நம்பிக்கை உண்டு. உண்மைத்தன்மை இல்லாத செயல்கள் என்றைக்கும் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்று அடிக்கடி சொல்வார்.
ஒரு காலத்தில் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாதுனு சொன்னவர்தான். சித்தர் போன்ற குணம் உள்ளவர். அவர் மனதில் எந்த எண்ணம் ஆழமாக பதிந்திருக்கிறோ , அந்த பதிவை வெளிப்படையாக வெளியிடும் மனதைரியம் அவருக்கு இருக்கிறது.
இந்த நேரத்தில் தனது வாய்ஸ்ஸால் தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் என நினைத்துவிட்டால் குரல் கொடுப்பதற்கு சங்கோஜப்படமாட்டார். ஆதவ் சொன்னது போல் பயப்படமும் மாட்டார். எந்த கருத்தையும் தைரியமாக சொல்லக் கூடிய மனோதிடம் உள்ளவர்தான் ரஜினி. இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்தின் கண்டனத்தை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவும் மன்னிப்பு கேட்டுவிட்டார். அதுவும் மீடியா முன்பல்ல! தவெக பொதுக் கூட்டத்தில்! மீடியா முன்பு பேசிவிட்டு 4 சுவற்றுக்குள் மன்னிப்பு கேட்டால் போச்சா என பலர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications