தமிழக மாநிலங்களவை தேர்தல்! 6 பேரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு? டெல்லி அரசியலுக்குள் நுழையும் கமல்!
சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் அதிமுக, திமுக உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கமல்ஹாசன் முதல் முறையாக டெல்லி அரசியலில் கால் பதிக்கிறார்.
தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள திமுகவின் வில்சன், தொமுச சண்முகம், புதுக்கோட்டை அப்துல்லா, அதிமுகவின் சந்திரசேகரன், மதிமுக வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக மாநிலங்களவைத் தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கியது.
ஒரு எம்பியை 34 எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்வார்கள். அந்த வகையில் சட்டசபையில் பலத்தின் அடிப்படையில் திமுக 4 உறுப்பினர்களையும், அதிமுக 2 உறுப்பினர்களையும் தேர்வு செய்ய முடியும்.
அந்த வகையில் இந்த 6 இடங்களுக்கு யாரை நியமிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த வகையில் திமுக சார்பில் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
கடந்த மக்களவைத் தேர்தலில் செய்த ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்யசபை சீட் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அதிமுக தரப்பில் இருந்து வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 6 பேரும் அண்மையில்தான் வேட்பு மனுதாக்கல் செய்தனர். நேற்றுடன் வேட்பு மனுதாக்கலுக்கான கால அவகாசம் முடிவடைந்தது. இதில் திமுக சார்பில் 3 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் , மநீம சார்பில் ஒருவரும், சுயேச்சைகள் 7 என மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது. ஜூன் 12 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனையில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் 10 சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும்.
திமுக தரப்பில் இருந்து வேட்புமனு நிராகரிக்கப்படாமல் இருக்க ஏதுவாக ஒவ்வொரு வேட்பாளரும் தலா இரண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் திமுக, அதிமுக, மநீம வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்படும். எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் இன்று வேட்புமனு பரிசீலனையின் போது சுயேச்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும். மற்ற ஆறு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வாகவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதனால் கமல்ஹாசன் முதல் முறையாக டெல்லி அரசியலுக்கு வருகிறார். மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்பிக்கள் உள்ளனர். அவர்களில் தமிழகத்திலிருந்து 18 பேர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுகிறது. இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும்.
இந்த நிலையில் திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, கல்யாணசுந்தரம், கேஆர்என் ராஜேஷ்குமார், கிரிராஜன், பி.வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் என 10 ராஜ்யசபா எம்பிக்கள் இருப்பார்கள்.
அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், தம்பிதுரை, தர்மர், இன்பதுரை, தனபால் என 5 உறுப்பினர்கள் இருப்பார்கள். மேலும் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம், தமாக சார்பில் ஜி.கே.வாசன், மநீம சார்பில் கமல்ஹாசன் ஆகியோரும் உறுப்பினர்களாக இருப்பார்கள். மதிமுகவும், பாமகவும் மாநிலங்களவையில் தங்களது பிரதிநிதித்துவத்தை இழக்கின்றன. இதனால் அந்த இரு கட்சிகளின் தொண்டர்களும் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications