வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.. மகனுக்காக முட்டி மோதிய பிரேமலதா! கடைசி வரை இறங்கி வராத எடப்பாடி!
சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் ந்லையில், தமிழக அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் திமுகவும், மீண்டும் அதிகாரத்துக்குத் திரும்ப வேண்டுமென்ற இலக்குடன் அதிமுகவும், கூட்டணி கணக்குகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சிறிய கட்சிகளின் ஆதரவை உறுதி செய்யும் முயற்சிகள் இரு தரப்பிலும் வேகமெடுத்துள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இணைவதற்கான பேச்சுவார்த்தையின் போது, தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் தரப்பில் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்வைத்ததாகவும், அதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தேமுதிக கூட்டணி
இதுவே தேமுதிக கூட்டணி முடிவு தாமதமாகும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மறுபுறம், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகள், மதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்கனவே உறுதியான இடத்தைப் பெற்றுள்ளன. தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மட்டுமே நிலுவையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 'ஆட்சியில் பங்கு' போன்ற கோரிக்கைகள் சில கூட்டணிக் கட்சிகளிடமிருந்து எழுந்தாலும், அதற்கு வாய்ப்பேயில்லையென திமுக திட்டவட்டமாகச் சொல்லிவிட்டது.
அதிமுக கூட்டணி
அதிமுக தலைமையிலான அணியில் பாஜக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், பாமக மற்றும் அமமுக கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. ஆனால், கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருந்த தேமுதிக மட்டும் இதுவரை எந்தத் தெளிவான முடிவையும் அறிவிக்காமல் இருந்து வருகிறது. இதுவே அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
என்டிஏ கூட்டணி
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகும், தேமுதிகவுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான வாக்கு வங்கி இருப்பதாக பாஜக மேலிடம் கருதுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வட மற்றும் மத்திய மாவட்டங்களில் தேமுதிக வாக்குகள் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கணக்கே, அக்கட்சியை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தலைமை அதிக ஆர்வம் காட்டுவதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. இதனால்தான், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக மேலிடத் தலைவர்கள், தேமுதிக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
ராஜ்யசபா சீட்
இந்தச் சூழலில், தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அறிவிக்கும் என பிரேமலதா விஜயகாந்த் முன்பே கூறியிருந்தார். ஆனால், அன்றைய தினம் கடலூரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில், கூட்டணி குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதன் பின்னர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தரப்பினருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
பிரேமலதா விஜயகாந்த்
அந்த சந்திப்பில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும், கூடுதலாக ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தக் கோரிக்கைகளில் முழுமையான ஒப்புதல் கிடைக்காததால், தேமுதிக கூட்டணி முடிவு இன்னும் உறுதி செய்யப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி முடிவு
உண்மையில் வேறு கட்சிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தருவதில்லை என்பதே எடப்பாடி பழனிச்சாமியின் நிலைப்பாடு. கடந்த மாநிலங்களவைத் தேர்தலை போல அதிமுகவினருக்கு மட்டும்தான் மாநிலங்களவை உறுப்பினர் என்ற முடிவை எடுத்திருந்தார். ஆனால் தற்போது டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்ந்து இருக்கும் நிலையில் டெல்லி அரசியலை கவனித்துக் கொள்வதற்காக அவருக்கு ராஜ்யசபா சீட்டு கொடுக்கப்பட உள்ளது.
பிரேமலதா அதிருப்தி
மற்றொரு சீட்டு அதிமுகவினருக்கு வழங்கப்பட இருக்கிறது. இருக்கும் இரண்டு சீட்டையும் அதிமுக மற்றும் முன்னாள் அதிமுக நிர்வாகிகளுக்கு ஒதுக்கி விட்டதால், பிறகு எந்த கட்சிகளுக்கும் ராஜ்யசபா சீட் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி சொல்லிவிட்டாராம். அதனால்தான் பிரேமலதா அதிருப்தியில் இருக்கிறார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications