வட மாவட்டங்களில் மட்டும் ஏன் இப்படி? அப்புறம் எப்படி தரம் உயரும்?ஆதங்கத்தை கொட்டிய ராமதாஸ்!
சென்னை: தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் அதேநேரத்தில் வட மாவட்டங்களில் ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் வட மாவட்டங்கள் கடைசி இடங்களில் இருப்பதற்கு இதுவே காரணம் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு பள்ளிகளுக்கு 1966 புதிய ஆசிரியர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்கள் மாதத்திற்கு மாதம் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை நிரப்பி, கல்வித்தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளாதது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை 1766 இடைநிலை ஆசிரியர்கள், 200 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என 1966 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அட்டவணைப்படி இடைநிலை ஆசிரியர்கள் 6553 பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; ஆனால், இப்போது அதில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கு 1766 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதேபோல், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கையும் 267ல் இருந்து 200 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஒவ்வொரு மாதமும் பெருமளவிலான ஆசிரியர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர். அதனால், ஒவ்வொரு ஆண்டும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். பத்தாண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டில் 6553 ஆக இருந்த காலியிடங்களின் எண்ணிக்கை 8643 ஆக அதிகரித்திருப்பதாக தமிழக அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது.
ஆனால், அந்த இடங்களை முழுமையாக நிரப்பாமல் 1766 இடங்களை மட்டும் நிரப்புவது எந்த வகையில் நியாயம்? தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் இருந்து நடப்பாண்டில் பல்லாயிரம் ஆசிரியர்கள் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், 1966 ஆசிரியர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பது போதுமானதல்ல.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஒரே சீராக இல்லை. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் காலியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதேநேரத்தில் வடமாவட்டங்களில் காலியிடங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் வட மாவட்டங்கள் கடைசி இடங்களில் இருப்பதற்கு இதுவே காரணம் ஆகும். இத்தகைய சூழலில் காலியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டால் மட்டும் தான் வடமாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அரசு பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அவற்றை புறக்கணித்து விட்டு, மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிப்பதால் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் மேலும் மேலும் சீரழியுமே தவிர, உயராது என்பதை தமிழக அரசு உணர வேண்டும். அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க நிதிப்பற்றாக்குறை ஒரு தடையாக இருக்கக் கூடாது. கல்வித்துறைக்கும், மருத்துவத்துறைக்கும் தான் மிக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு பெருமளவில் அதிகரிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications