கூட்டணி விஷயத்தில் நடந்த “தப்பு”.. ராமதாஸ் சூசக பேச்சு.. அன்புமணி உடனான மோதலுக்கு ஆரம்பமே இதுதானா?
சென்னை: பாமக வரும் 2026 தேர்தலில் கூட்டணி மாறப் போவதை சூசகமாக வெளிப்படுத்தி இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். கூட்டணி விஷயத்தில் நாம் தவறு செய்துவிட்டோம், அந்த தவறை தொடர வேண்டியது இல்லை எனப் பேசியுள்ளார் ராமதாஸ். கூட்டணி தொடர்பான நிலைப்பாடே, இன்று ஏற்பட்டுள்ள ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு தொடக்கப்புள்ளி என்றும் கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஒவ்வொரு கட்சியுமே தங்களின் அரசியல் வியூகங்களை கூர்மைப்படுத்தி வருகின்றன. விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், கூட்டணியில் பல மாற்றங்கள் நடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதும் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.

பாமக கூட்டணி கணக்கு
தமிழ்நாட்டில் ஓரளவுக்கு நிலையான வாக்கு வங்கி உள்ள கட்சிகளில் முக்கியமானது பாமக. வட மாவட்டங்களில் வலிமையோடு இருக்கும் அக்கட்சி, வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 1991 தேர்தலில் போட்டியிடத் தொடங்கியதிலிருந்தே, ஒவ்வொரு தேர்தலிலும் பாமக பிரதிநிதித்துவம் அரசியலில் இருந்து வருகிறது.
1996 சட்டமன்றத் தேர்தல் வரை தனித்துப் போட்டியிட்ட பாமக, 1998-ல் முதன்முறையாக அதிமுக கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டது. பின்னர் 1999 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தது. அதன்பின்னர் அதிமுக, திமுக என தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியை மாற்றினாலும், தனக்கான சுமார் 5 சதவீத வாக்குவங்கியை குறையாமல் பார்த்துக்கொண்டது பாமக. சிலமுறை மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றது.
மாற்றி மாற்றி கூட்டணி
மாற்றி மாற்றி கூட்டணி வைப்பது, மாற்று சமூக வாக்குகளை இழந்தது காரணமாக 2009, 2011 தேர்தலில் பாமகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின்னர், அன்புமணி தலைமையில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற முழக்கத்தை கையில் எடுத்தது பாமக. 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக அணியில் இடம்பெற்று தருமபுரியில் வென்றார் அன்புமணி.
அந்த நம்பிக்கையில் 2016-ல் 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற முழக்கத்தோடு 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது பாமக. அப்போது, போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த பாமக, 5 சதவீத வாக்கு வங்கியை தக்கவைத்தது. 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்குச் சென்றது பாமக. பின்னர் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக தொடர்ந்தது. அந்தத் தேர்தலில் வெறும் 5 தொகுதிகளில் வென்ற பாமகவின் வாக்கு வங்கி, 3.8 சதவீதமாக குறைந்தது.
கூட்டணி விலகல்
இந்தச் சூழலில் தான் அதிமுக - பாஜக கூட்டணி பிளவுற்ற நிலையில், அதிமுகவை விட்டுவிட்டு பாஜகவுடன் கடந்த லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்தது பாமக. ராமதாஸ், அதிமுகவுடன் கூட்டணியை தொடர விரும்பியதாகவும், அன்புமணி தான், பாஜகவுடன் கூட்டணி அமைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார் என்றும் கூறப்பட்டது.
2024 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவியது. அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணியும் தருமபுரியில் தோல்வியடைந்தார். இந்தச் சூழலில் தான், கூட்டணியை மாற்ற ராமதாஸ் விரும்புவதாகத் தெரிகிறது.
ராமதாஸ் பேச்சு
இன்று விழுப்புரம் வானூர் அருகே பட்டானூரில் பாமகவின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், கௌரவத்தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தப் பொதுக்குழுவில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "கட்சி தொடங்கி 35 ஆண்டுகள் கடந்தும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. நாம் ஆட்சிக்கு வந்து இருந்தால் 4 நாட்களுக்கு முன் நடத்திய தனி இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்தி இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் பெற்றால் வெற்றி நம் பக்கம்.
ஒரு முறை தவறு செய்தால்
2026 ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சிதான். யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன். கூட்டணியில், ஒருமுறை தவறு செய்தால் மீண்டும் தவறு செய்வோம் என்று அர்த்தம் இல்லை. அது எந்த பாதை என்பதை அடுத்த ஆண்டு பொதுக்குழுவிலோ அதற்கு முன்போ முடிவு செய்வோம். அடுத்த ஆட்சியில் நாம் பங்கேற்போம். தமிழகம், புதுச்சேரியில் ஆட்சி அமைக்கப்போவது நம் கூட்டணிதான். இங்குள்ளவர்கள் அமைச்சர்களாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் இனி திமுக ஆட்சி வரக்கூடாது என சபதம் ஏற்போம்" எனப் பேசியுள்ளார்.
ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு தொடக்கப்புள்ளி
கடந்த லோக்சபா தேர்தலிலேயே பாஜக உடனான கூட்டணியை ராமதாஸ் விரும்பவில்லை, அன்புமணியின் வற்புறுத்தலால் தான் கூட்டணி அமைந்தது என பேசப்பட்டது. அண்மையில், பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகை நானே என்ற நன்னூல் வரியை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டார் ராமதாஸ்.
இதனால், பாஜக உடனான கூட்டணியை அவர் முறிக்க விரும்புவதாக விவாதம் எழுந்தது. ஆனால் அப்போது, இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்றும் ராமதாஸ் விளக்கம் அளித்திருந்தார். இன்றைக்கு பொதுக்குழுவில், கூட்டணி பற்றி சூசகமாகப் பேசியிருக்கிறார் ராமதாஸ். அதோடு, அன்புமணி உடனும் வாக்குவாதம் செய்துள்ளார். அன்புமணியின் நிலைப்பாடுகளால் அதிருப்தி அடைந்தே ராமதாஸ் இவ்வாறு நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications