ராமதாஸின் ஸ்பீடு.. ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்.. ஒரே நாளில் அதிரடி.. இறங்கி அடிக்குது பாமக
சென்னை: தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டங்களை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அதன்படி சென்னை, கடலூர், அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், வேலூர், ஈரோடு, தேனி, கோவை, தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட 39 மாவட்டங்களில் இன்று நவம்பர் 1ம் தேதி, ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடைபெறுகிறது. இது மிகுந்த பரபரப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் பாமக பொதுக்குழு கூட்டத்தில் இளைஞரணி தலைவராக தன்னுடைய மூத்த மகள் ஸ்ரீ காந்தியின் மகன் முகுந்தன் பரசுராமனை நியமிப்பதாக டாக்டர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.

இதற்கு பொதுக்குழு மேடையிலேயே அன்புமணி ராமதாஸ் கடுமையான எதிர்ப்பை காட்டினார்.. பாமக மேலிடத்தில் பிளவும், அதிகார மோதலும் அன்றைய தினம் ஏற்பட துவங்கி, தொடர்ந்து கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிறகு கட்சியிலிருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தன்னுடைய கடைசி மூச்சு உள்ளவரை பாமகவின் தலைவராக நான் தான் இருப்பேன் என்றும் அறிவித்தார். அத்துடன் அன்புமணி மீதும் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைக்க துவங்கினார்.. இதனை சிறிதும் எதிர்பார்க்காத அன்புமணி, பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டி, அடுத்த பரபரப்பை கூட்டினார்.
தந்தை மகன் விவகாரம்
தந்தை, மகன் விவகாரத்தில் பாமகவினர் குழம்பிய நிலையில், யார் பக்கம் நிற்பது என்றும் கையை பிசைந்து நிற்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.. தேர்தலும் நெருங்கி வருவதால், இருவருமே தனித்து செயல்படுவது தொண்டர்களுக்கும் கவலையை தந்து வருகிறது.
சமீபத்தில் திண்டிவனத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ராமதாஸ் கூட்டியிருந்த நிலையில், தன்னுடைய மூத்த மகள் ஸ்ரீ காந்திமதியை பாமகவின் செயல் தலைவராக அறிவித்ததுடன்,கட்சிக்கும் எனக்கும் காந்திமதி பாதுகாப்பாக இருப்பார் என்றும் ராமதாஸ் கூறினார். இதனால் மேலும் பாமகவுக்குள் புயல் அடித்து கொண்டிருக்கிறது.
சிறப்பு தீர்மானங்கள்
பாமக செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி சிறப்பு தீர்மானங்களை நிறைவேற்றி சின்னத்தை மீட்டெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு அழுத்தம் தர ராமதாஸ் அதிரடி வியூகங்களை வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
அன்புமணியோ செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது, "ஒரு சில கட்சிகளில் உட்கட்சி பிரச்சனை இருக்கிறது.. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளன. அதற்குள் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி, எங்கள் உட்கட்சி பிரச்சனையாக இருந்தாலும் சரி சுமுகமாக தீர்க்கப்படும். தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதைப்பற்றி முன்கூட்டியே தெரிவிக்க முடியாது, விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்
இப்படி பாமகவில் உள்கட்சி மோதல் தொடர்ந்து வெடித்து வரும் சூழலில் இன்றைய தினம் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தை டாக்டர் ராமதாஸ் நடத்த உள்ளார்.. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பா.ம.க.வின் ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநில பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அடுத்தக்கட்ட செயல்பாடுகள்
அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பங்கேற்குமாறும், அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட நமது அனைத்து அமைப்புகளின், அணிகளின் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி பொறுப்பாளர்கள், செயல்வீரர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொள்வார்கள்.
இந்த செயற்குழு மூலம் கட்சி வளர்ச்சி மற்றும் அமைப்பு பணிகள் குறித்தும், அடுத்தகட்ட கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் ராமதாஸ் அதிரடி
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டங்களை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதன்படி சென்னை, கடலூர், அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், வேலூர், ஈரோடு, தேனி, கோவை, தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட 39 மாவட்டங்களில் இன்றைய தினம் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications