"டென்ஷன் ஆகாதீங்க.. என்னை நினைத்தாலே பிபி ஏறுதாம்.. " வேதனையோடு பேசிய ராமதாஸுக்கு.. அன்புமணி பதில்!
சென்னை: பாமகவில் ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. இன்று நடந்த கூட்டத்தில் ராமதாஸிடம் அன்புமணி மன்னிப்பு கேட்டார். இதனால் மோதல் சீக்கிரம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அன்புமணியை நினைத்தாலே பிபி ஏறுவதாக ராமதாஸ் கூறியிருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் அன்புமணி பேசியது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றாக பாமக இருக்கிறது. சட்டசபைத் தேர்தல்களில் கணிசமான வாக்குகளைப் பெறும் பாமக கூட்டணி வியூகத்தில் முக்கிய இடத்தை எப்போதுமே பெறும். ஆனால், இப்போது கடந்த சில காலமாக அங்கு உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. இருவரும் பொதுவெளியிலேயே கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இதனால் பாமக நிர்வாகிகள் குழப்பத்திலும், மனவேதனையிலும் உள்ளனர்.

ரமதாஸ் வேதனை
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசும்போது பாமக நிறுவனர் ராமதாஸ், "இவரைப் பார்க்கும்போது ஏற்படும் அதிர்ச்சி, மனக்குமுறல்களால் எனக்கு பிபி ஏறுது.. ஒரு சமயம் பிபி அதிகமாகி உடல்நலம் மோசமடைந்துவிட்டது.. தந்தை தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதைக் கேட்டால் நான் மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறேன் என்பார். பாட்டிலைத் தூக்கி அடிப்பது தான் மகிழ்ச்சியா" என்று கேட்டிருந்தார்.
இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சியின் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் இன்று நடந்த நிலையில், அதில் ராமதாஸின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அன்புமணி ராமதாஸ் பேசியிருந்தார். ராமதாஸ் உடல்நலத்தோடு இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அன்புமணி, அவர் சொல்வதைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அன்புமணி பதில்
அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அன்புமணி, "10 ஆண்டுகளுக்கு முன்பு ராமதாஸுக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. அவருக்கு சுகர், பிபி என எல்லாம் இருக்கு. அதனால்தான் நான் சொல்கிறேன்... நீங்க நல்ல இருக்க வேண்டும். உடல் நலத்தோடு இருக்க வேண்டும். டென்ஷன் ஆகதீர்கள். என்ன செய்ய வேண்டும் நீங்கள் சொல்லுங்கள்.. ஒரு மகனாகக் கட்சித் தலைவனாக டக்கு டக்குனு செய்துவிடுகிறேன்.
நீண்ட ஆயுளோடு வாழணும்!
வருத்தப்பட வேண்டாம். கவலைப்பட வேண்டாம். கோபப்பட வேண்டாம். ஏனென்றால் இது நீங்கள் உருவாக்கிய கட்சி. உங்கள் கனவுகளை நிறைவேற்றுவோம். உங்களின் 45 ஆண்டுக்கால உழைப்பு இந்த கட்சியில் இருக்கிறது. அது சாதாரண உழைப்பு இல்லை. நீங்கள் இன்று தேசிய தலைவர். ராமதாஸ் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும். 100 ஆண்டுகள் கடந்தும் நல்ல ஆயுளோடு, மன நிம்மதியோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்" என்று பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
திமுக மீது சாடல்
அந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மேலும் பேசுகையில், "ஒரு சிலர் சமூக நீதிக்கு ஆதரவாக இருப்பார்கள் ஒரு சிலர் எதிர்ப்பாக இருப்பார்.. ஆனால், திமுகவினர் மூன்றாவது வகை.. சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம், ஜாதியை ஒழிப்போம், பெரியார் வாரிசு என்றெல்லாம் மேடைகளில் முற்போக்கு பேசுவார்கள். ஆனால் அதை எதையும் நடைமுறைப்படுத்த மாட்டார்கள் . சமூக நிதியின் துரோகி திமுகவினர்..
உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது சமூக நீதிக்காக என்ன செய்தீர்கள்? திமுகவினர் வீண் பேச்சு வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. திமுகவால் செய்ய முடியாது.. இட ஒதுக்கீடு ஜாதிவாரி கணக்கீடு எடுக்கச் சொல்லுங்கள்.. திமுகவால் நிச்சயம் செய்யாது" என்று திமுகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications