அன்புமணி என்டிஏ கூட்டணிக்கு சென்றதுமே.. ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு.. பாமகவில் விருப்ப மனு!
சென்னை: அதிமுக - பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியும் இணைந்துள்ளார். இந்த நிலையில் அன்புமணி நடத்தும் கூட்டணி பேச்சு சட்டவிரோதம், நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று கூறியுள்ள ராமதாஸ் பாமக சார்பில் விருப்ப மனு விநியோகம் வரும் 9 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விருப்ப மனுக்களை 9 ஆம் தேதி காலை 10 மணி முதல் தைலாபுரம் தோட்டத்தில் வழங்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் கூறியிருப்பதாவது:- "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் தங்களது விருப்ப மனுக்களை 09.01.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் தைலாபுரம் தோட்டத்தில் வழங்கலாம்.
விருப்ப மனுக்கள் தைலாபுரம் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தவுடன், பெற்றுக் கொண்டதற்கான ரசீது உடனே வழங்கப்படும்" என்று கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு மருத்துவர் அய்யா மட்டுமே நிறுவனத் தலைவராக இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்.
17.12.2025 முதல் மருத்துவர் அய்யாவே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடனோ அல்லது வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது.
மருத்துவர் அய்யா மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்தல் கூட்டணி பேசும் அதிகாரம் பெற்றவர். இந்நிலையில் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம். கட்சி விதிப்படி மருத்துவர் அய்யா மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications