ராமஜெயம் கொலை.."க்ளூ".. குற்றவாளிகளை நெருங்கியாச்சு? டிஜிபி ஷகீல் அக்தர் சொல்வதை பாருங்கள்!
சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருப்பதாக சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் கூறியுள்ளார். கொலை தொடர்பாக சில தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் கே.என் நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் உள்ள திருவளர்ச் சோலையில் காவிரி ஆற்றின் கரையோரம் இரும்பு கம்பிகளால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது.
இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யார், என்ன காரணத்திற்காக கொலை நடந்தது என்பது குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. ராமஜெயத்தை கடத்தி கொலை செய்தது யார் என்பது பற்றி மர்மமாகவே உள்ளது. இந்த நிலையில் வழக்கை எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான டி.எஸ்.பி மதன் மற்றும் ஆய்வாளர்கள் 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ கொலை பாலன் கொலை
கடந்த 2000ம் ஆண்டு மயிலாப்பூர் எம்.எல்.ஏ. பாலன் நடைபயிற்சி மேற்கொண்டபோது 16 பேர் கொண்ட கும்பலால் கடத்தி கொலை செய்யப்பட்டார். ராமஜெயமும் அதேபோல் நடைபயிற்சி மேற்கொண்டபோது கடத்தி கொல்லப்பட்டதால் முன்னாள் எம்.எல்.ஏ. பாலன் கொலை வழக்கில் தொடர்புடைய கணேசன் மற்றும் செந்தில் ஆகிய இருவரையும் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலன் விசாரணை குழுவினர் கடந்த செப்டம்பர் மாதம் விசாரணை செய்தனர். இவர்களை திருவெறும்பூர் பழைய காவல் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை செய்து பின்னர் விடுவித்தனர்.

20 பேரிடம் விசாரணை
ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் குற்றவாளிகளின் இறுதிப்பட்டியலை சிறப்பு புலனாய்வுக் குழு தயார் செய்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ, எம்.கே.பாலன் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல்லை சேர்ந்த நரைமுடி கணேசன், தினேஷ், புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார், மோகன்ராம் உள்ளிட்ட 20 பேரின் பெயர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் இன்று திருச்சி வந்திருந்தார்.

ஷகீல் அக்தர் பேட்டி
விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் "விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விசாரணை முடிவடைந்ததும் உங்களிடம் அனைத்தும் தெரிவிக்கிறேன். தற்போது எந்த தகவலும் சொல்ல முடியாது.
என்று கூறினார். உண்மை கண்டறியும் சோதனை எதுவும் தற்போது நடத்த திட்டமில்லை என்றும் தெரிவித்தார்.

சிபிசிஐடிக்கு கிடைத்த க்ளூ
எங்களுக்கு சில க்ளூ கிடைத்துள்ளன. அதை வைத்து விசாரித்து வருகிறோம். விசாரணைக்குப் பிறகு உண்மை எதுவோ அதை நான் உங்களுக்கு சொல்கிறேன். கொலை வழக்கு தொடர்பான ஆதாரங்கள் முதலில் கிடைக்க வேண்டும். அதன் பிறகுதான் விசாரணை நடத்தி முடிவுகளை உங்களுக்கு கூற முடியும் என்று கூறினார்.

கொலையாளியை நெருங்கி விட்டீர்களா
கடந்த 10 ஆண்டுகாலமாக என்ன நடந்தது என்று நாங்கள் கூற முடியாது. கடந்த 6 மாதகாலமாக என்ன நடந்தது என்றுதான் நாங்கள் கூற முடியும். குற்றவாளியை நெருங்கி விட்டோமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பார்ப்போம்..லெட் அஸ் சீ என்று கூறினார்.

விசாரணை எப்படி
வரும் 30ம் தேதியுடன் ஓய்வு பெறப் போகிறீர்கள் வாழ்த்துக்கள். அதற்குள் ராமஜெயம் கொலை வழக்கு முடிந்துவிடுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்த ஷகீல் அக்தர். சொல்லமுடியாது..பார்ப்போம்..என்று கூறினார்.

தேடிக்கொண்டே இருக்கிறோம்
குற்றவாளிகள் யார் என்று தேடிக்கொண்டே இருக்கிறோம். விசாரணை எப்படி நடைபெறுகிறது என்று கூற முடியாது. எங்களுக்கு 100 சதவிகித ஒத்துழைப்பு கிடைக்கிறது. விசாரணைக்கு வராதவர்களைப் பற்றி வெளிப்படையாக கூற முடியாது என்றும் ஷகீல் அக்தர் தெரிவித்தார். ராமஜெயம் கொல்லப்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும் குற்றவாளியின் நிழலைக் கூட நெருங்கமுடியாமல் காவல்துறையினரும் விசாரணை அதிகாரிகளும் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications