ரேஷன்தாரர்களுக்கு அறிவிப்பு.. நிவாரண தொகை வாங்கியாச்சா? இந்த நாள் ரேஷன் கடைகள் லீவு.. நோட் பண்ணுங்க
சென்னை: வடமாவட்டங்களில் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடைகள் செயல்படுவது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புயல் புரட்டிபோட்டுவிட்ட சென்ற நிலையில், அடுத்த அதிர்ச்சி தென் மாவட்டங்களில் காத்திருந்தது.. வரலாறு காணாத மழை வெள்ளத்தில் தென்மண்டலமே சூழ்ந்துவிட்டது.
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும், தூத்துக்குடியில் இயல்பை விட 68 சதவீதமும், நெல்லை 135 சதவீதமும், குமரியில் 103 சதவீதமும், தென்காசியில் 80 சதவீதமும் மழைப்பொழிவு பதிவாகியது..
வெள்ள நிவாரணம்: வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிட ரூ.1487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், இதற்காக ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.. அந்தவகையில், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கும் ரூ. 6000 நிவாரணமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டிருக்கிறது..
இதற்காக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அதிக அளவு வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று, நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணியும் அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் துவங்கப்பட்டுள்ளன. அந்த டோக்கனில் நிவாரண தொகை வழங்கப்படும் நாள், நேரம் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம்: நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, அம்பை ஆகிய தாலுகா பகுதிகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகை இன்று வழங்கப்படுகிறது.. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம் ஆகிய 5 தாலுகாக்கள் முழுவதும் 3 லட்சத்து 23 ஆயிரத்து 108 ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
அந்தவகையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 63 ஆயிரத்து 760 ரேஷன்கார்டு தாரர்களுக்கு வெள்ள நிவாரண தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.398 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரம் மாநில பேரிடர் நிதியில் இருந்து தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து அரசாணையும் பிறப்பித்துள்ளது.
1000 ரூபாய்: தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி, திருவேங்கடம், வி.கே.புதூர் ஆகிய 8 தாலுகாக்கள் முழுவதும் 4 லட்சத்து 74 ஆயிரத்து 939 ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 வழங்கும் பணி இன்று தொடங்கியது.
இன்று நிவாரண தொகை வழங்கும் பணி ஆரம்பமானதையடுத்து, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ரேஷன்கடைகளில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் திரண்டு வந்தனர்.. நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருந்து நிவாரண தொகையை பெற்று சென்றனர்.
விடுமுறை: இதனிடையே, வெள்ள நிவாரண தொகையை மேற்கொள்ளும் பணிகளுக்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அனைத்து ரேஷன்கடைகளும் வருகிற 31-ந் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என்றும் நிவாரண நிதி வழங்கும் பணிகளுக்காக அன்றைய தினம் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அடுத்த நாளான ஜனவரி 1, 2024 அன்று விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications