அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. தமிழக அரசின் மாஸ் திட்டம் அமலானது.. ரேஷன்தாரர்கள் ஹேப்பி
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியை தமிழக அரசு செய்துள்ளது.. இதுகுறித்த அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..

முதல்வர் ஸ்டாலின்: அதேபோல, தமிழகத்தில் தர்மபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் விருப்பத்தின் பேரில் 18 கிலோ அரிசி, 2 கிலோ கேழ்வரகு என 20 கிலோ உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திட்டம்தான் தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடக்க விழா அதியமான்கோட்டை கூட்டுறவு சங்க அலுவலக வளாகத்தில் நடந்துள்ளது.
இரண்டு கிலோ கேழ்வரகு விநியோகத்தை மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
பெருமிதம்: இந்த விழாவில் பேசிய அமைச்சர், "தமிழக முதல்வர் அவர்கள் வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தருமபுரி மாவட்டம் சிறுதானிய மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் 2 கிலோ அரிசிக்கு பதிலாக 2 கிலோ கேழ்வரகு வழங்க ஏதுவாக நேரடி கொள்முதல் நிலையம் கடந்த ஜனவரி 21 அன்று தருமபுரி, அரூர், பென்னாகரம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் 31ம் தேதி முடிய 32.150 மெட்ரிக் டன் கேழ்வரகு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.
மேலும் சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய உதவி அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்று அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்..
வீட்டுமனைப்பட்டா: இறுதியில், இந்த விழாவில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 175 பயனாளிகளுக்கு 1.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், குடும்ப அட்டைகள், திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய உதவித்தொகை, மாற்று திறனாளி உதவித்தொகை, தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகை, விதவை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய உதவி அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளது, விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
பட்ஜெட்: காரணம், பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சிறுதானியங்கள் குறித்த முக்கியத்துவத்தை அப்போதே தமிழக அரசு எடுத்துரைத்திருந்தது.. குறிப்பாக, "கம்பு, கேழ்வரகு, வரகு, சோளம், பனிவரகு, திணை, குதிரைவாலி, சாமை ஆகியவை சிறு, குறு தானியங்கள், சிறு தானியங்கள் வறட்சியிலும் வளர்பவை. வளமற்ற மண்ணிலும் நலம்பெற்று துளிர்ப்பவை. ஊட்டச்சத்து நிறைந்தவை..
தமிழ்நாட்டில் அவற்றை மறுபடியும் செழிக்கச்செய்யும் பொருட்டு, சிறுதானிய பரப்பு, உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில், கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 மாவட்டங்களை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட 2 சிறு, தானிய மண்டலங்களுடன் உழவர்களின் கோரிக்கைகளை ஏற்று நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்கள் புதியதாக சேர்த்துக் கொள்ளப்படும்.
கேழ்வரகு: சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications