சர்க்கரை அட்டைதாரர்கள் இனி "ஜில்லுனு" ரேஷன் வாங்கலாம்.. ரேஷன்கடைகளில் மாற்றம் வருது.. தமிழக அரசு நச்
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, பொதுவினியோக திட்டத்தில் உள்ள குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணவும், மாதந்தோறும் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்களையும் நடத்தி வருகிறது. இதுபோக முக்கிய அதிரடிகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின்போது, ரேஷன் பொருட்கள் குறித்து பல்வேறு அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. கடந்த வாரம் சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, "ஒரே நேரத்தில், அரிசி, பாமாயில், கோதுமை, சர்க்கரை, பருப்பு போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதற்காக, ஒவ்வொரு மாதமும், 15ம் தேதி முதல் நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதனால், கடைகளில், 60 சதவீத பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு, 1ம் தேதி முதல் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை என்று புகார் வந்தால், சொன்னால், அதற்கு உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்" என்று அறிவித்தார்.
அரிசி, சர்க்கரை, பாமாயில்
அமைச்சரின் இந்த அரிடி அறிவிப்பானது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால், பெரும்பாலான ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க வந்தால், எல்லா பொருளையுமே ஒரே நேரத்தில் பெற்று செல்ல முடிவதில்லை. அரிசி, சர்க்கரை மட்டும் தான் எளிதாக கிடைக்கிறதே தவிர பாமாயில், துவரம்பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு ஸ்டாக் இல்லை என்கிறார்கள்..
இதனால் அந்த பொருட்களை வாங்குவதற்கு மீண்டும் ரேஷனுக்கு செல்ல வேண்டிய நிலைமை உள்ளது.. இப்போது, அமைச்சர் அறிவித்துள்ள அறிவிப்பு, ரேஷன்தாரர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது.. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால், ரேஷனுக்கு அடிக்கடி செல்லும் அலைச்சலும் தவிர்க்கப்படும்.
நிரந்தரமாக மேற்கூரை
அதேபோல கோடை வெயிலை கருத்தில் கொண்டு மற்றொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. அதாவது, தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய, தருமபுரி தொகுதி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், "ரேஷன் கடைகளில் பெண்கள் தான் அதிக எண்ணிக்கையில் வெயிலில் நின்று பொருட்கள் வாங்குகின்றனர். அதனால் ரேஷன் கடைகள் முன்பு மரம் நட வேண்டும். இல்லாவிட்டால் நிரந்தரமாக மேற்கூரை அமைக்க வேண்டும்" என்றார்.
இதற்கு உணவுத்துறை சக்கரபாணி பதிலளித்து பேசும்போது, "தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் மரம் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் கடைகளுக்கு முன்பாக நல்ல நிலையில் எப்போதும் நிரந்தரமாக இருக்கும் வரையில் மேற்கூரை அமைக்கவும், ரேஷன் கடைகளுக்கு முன்பாக மரங்கள் நடவும், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்..
கேழ்வரகு கொள்முதல் நிலையம்
இதையடுத்து, எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் பேசும்போது, "தமிழகத்தில் அதிக அளவில் தருமபுரியில்தான் நெல் அரவை ஆலைகள் உள்ளன. அதனால் அவற்றுக்கு போதிய நெல் வழங்க அரசு முன்வருமா? கேழ்வரகு கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?" என்று கேள்வி எழுப்பினார்..
இதற்கு சக்கரபாணி, "கடந்த ஆண்டு 24 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 32 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தருமபுரியில் உள்ள அரவை ஆலைகளுக்கு அதிக நெல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை விவசாயிகளிடம் இருந்து 4311 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு, ரூ17.20 கோடி, விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது" பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications