அரிசி, பருப்பை இழந்து தவிக்கும் மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. நாளை ரேஷன் கடைகள் அனைத்தும் இயங்கும்!
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் அனைத்து நியாய விலைக் கடைகளும் நாளை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அதனை வெளியேற்றும் வேலைகளிலும், அங்குள்ள மக்களை மீட்கும் வேலைகளிலும் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. சில பகுதிகளில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. அப்பகுதிகளில் மழைநீரை வடியச் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள், பல்வேறு அமைப்பினரும், நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், அரிசி, பருப்பு என உணவுப் பொருட்கள் வீணாகியுள்ளன. இதனால், வெள்ள நீர் வடிந்த பிறகும், மக்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். அன்றாடங் காய்ச்சி மக்கள், கடந்த சில நாட்களாக புயல் மழை காரணமாக வேலைக்குச் செல்ல முடியாததால் பணம் இன்றி தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும், நியாய விலைக் கடைகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், கடந்த 4 நாட்களாக ரேஷன் கடைகள் இயங்கவில்லை.
இந்நிலையில், சென்னை உட்பட 4 மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்களின் வசதிக்காக நாளை (டிசம்பர் 8) அன்று ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் நாளை (டிச. 08) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள், ரேஷன் பொருட்களை வாங்கி, பயன்படுத்த வழி ஏற்பட்டுள்ளது. எனினும், மழைநீர் இன்னும் தேங்கியுள்ள பகுதிகளில் ரேஷன் கடை எப்படி செயல்படும் என்ற கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications