பொங்கல் பரிசு இன்னும் வாங்கலயா? ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஜனவரி 12 கடைகள் இயங்கும்!
சென்னை: ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதால் ஜன.12ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் வருகிற ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக, ஜனவரி 12 (வெள்ளிக் கிழமை) அன்று அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.

பொதுவாக, இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படும். ஆனால், தற்போது பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ஜனவரி 12 (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நாளை ஈடுகட்டும் விதமாக வரும் ஜனவரி 16ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் கடந்த 7ஆம் தேதி தொடங்கியது.
ரூ.1000 பொங்கல் பரிசுத்தொகையை அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே பெற முடியும் என்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைத்தாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் ஆகியோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது மக்கள் மத்தியில் பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தும் கிடைக்காத மக்கள், பொங்கல் பரிசுத்தொகை டோக்கனும் தங்களுக்கு மறுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்து, குமுறலை வெளிப்படுத்தினர். இது முதல்வர் ஸ்டாலினை எட்டிய நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இன்று முதல் ஜனவரி 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காகவே, வரும் வெள்ளிக்கிழமை, ரேஷன் கடைகள் இயங்க உள்ளன.












Click it and Unblock the Notifications