உயிரிழந்த குடும்பத்தினரின் வங்கி பணத்தை எடுப்பது எப்படி! புதிய ரூல்ஸை வெளியிட்ட ரிசர்வ் வங்கி
சென்னை: குடும்பத்தில் யாரேனும் உயிரிழந்தால் அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது பெரிய பிராசஸாக இருந்து வந்தது. இதில் இருக்கும் சிக்கலைப் புரிந்து கொண்டு, உயிரிழந்தோரின் வங்கிக் கணக்கில் இருந்து குடும்பத்தினர் பணத்தைப் பெறும் நடைமுறைகளை எளிமையாக்க ரிசர்வ் வங்கி புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
திருத்தப்பட்ட புதிய விதிகளின்படி, ஒரு வாடிக்கையாளர் உயிரிழந்தால் அவருடைய கணக்குகள் மற்றும் லாக்கர்கள் தொடர்பான உரிமைகோரல்களை இனி 15 நாட்களுக்குள் வங்கிகள் முடித்துவைக்க வேண்டும். ஒரு வேளை உரிய காரணங்கள் இல்லாமல் உரிமைகோரலை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டால், நாமினிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி
இதற்கு முன்பு வரை உயிரிழந்தோரின் வங்கிக் கணக்கு அல்லது லாக்கரை குடும்பத்தினருக்குக் கொடுப்பதில் ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு நடைமுறையைப் பின்பற்றின. இது மக்களைக் குழப்பும் வகையிலேயே இருந்தது. அதைத் தீர்க்கும் வகையில் தான் புதிய கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாமினிகள் அல்லது வாரிசுகளுக்குப் பணம் கொடுக்கும்போது வாரிசு சான்றிதழ், நிர்வாகக் கடிதம் அல்லது உயிலை உறுதி செய்யும் ஆவணம் உள்ளிட்ட சட்ட ஆவணங்களைக் கேட்டு வங்கிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதேபோல், உயிரிழந்த வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் பெரிய தொகை இருந்தாலும் கூட, நாமினிகள் அல்லது வாரிசுகளிடமிருந்து இழப்பீட்டுப் பத்திரம் அல்லது பிணை ஆவணங்களை வங்கிகள் கோரக் கூடாது என்பதும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
நாமினி இல்லாமல் போனால்
நாமினி இல்லாமல் இருப்பது, உயில் இல்லாமல் போவது, பல வாரிசுகள் இருப்பது போன்ற சூழல்களில் கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், மற்ற வங்கிகளுக்கு ரூ.15 லட்சம் வரையிலும் உரிமைகோரல்களை முடித்து வைக்க வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சூழல்களில் உரிமைகோருபவர்கள் ஆர்பிஐ படிவம் ஒன்றை நிரப்பிக் கொடுத்தால் போதும். அத்தோடு காலமானவரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் சரிபார்க்கப்பட்ட அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதுபோன்ற சூழல்களில் மட்டும் உரிமை கோரும் நபர்களிடம் இருந்து ஒரு இழப்பீட்டுப் பத்திரத்தையும், மற்ற சட்டபூர்வ வாரிசுகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழையும் வங்கிகள் கோரலாம். தகுதிவாய்ந்த அதிகாரி வழங்கும் சட்டபூர்வ வாரிசு சான்றிதழ் அல்லது காலமானவரின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமான ஒருவர் கொடுக்கும் பிரமாணப் பத்திரமும் ஏற்றுக்கொள்ளப்படும்.
அதிக தொகை
மேலே குறிப்பிட்ட தொகைக்கு மேல் இருந்தால்.. கூடுதல் ஆவணங்கள் தேவைப்படும். வாரிசு சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், உரிமைகோருபவரின் அடையாள ஆவணம், இழப்பீட்டுப் பத்திரம் மற்றும் தடையில்லாச் சான்றிதழ் ஆகியவற்றை ஆர்பிஐ கேட்கலாம்.. வாரிசு சான்றிதழ் இல்லை என்றால் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமான ஒருவர், நோட்டரி அல்லது நீதிபதி முன் சத்தியப்பிரமாணம் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யலாம்.
உயில் இருக்கிறது ஆனால் நாமினிக்கள் யாரும் இல்லை... அல்லது சட்டப்பூர்வ வாரிசாக இல்லாத ஒருவர் நாமினியாக குறிப்பிடப்பட்டிருந்தால், வங்கிகள் அவர்களிடம் இருந்து அனைத்து ஆவணங்களையும் சேகரிக்க வேண்டும். அதேபோல சட்டபூர்வ வாரிசுகள் அல்லது நாமினிகள் இடையே தகராறுகள் ஏற்பட்டால், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மட்டுமே உரிமைகோரல்கள் முடித்து வைக்கப்படும்.
நீதிமன்ற உத்தரவு
ஒருவேளை குறிப்பிட்ட நபருக்குப் பணத்தைக் கொடுக்கக்கூடாது என நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தால், அந்த உத்தரவு நீக்கப்படும் வரை நிச்சயம் உரிமைகோரல்கள் பிராசஸ் செய்யப்படாது. நீதிமன்ற உத்தரவு கிடைத்த பின்னரே உரிமைகோரலை முடித்து வைக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
வைப்பு நிதி வைத்திருப்பவர் உயிரிழந்துவிட்டால்.. அது லாக்-இன் காலகட்டத்தில் இருந்தாலும் கூட எந்தவொரு அபராதமும் இல்லாமல் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய நடைமுறைகளை அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் அமல்படுத்துமாறு அனைத்து வங்கிகளையும் மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications