இனி தங்கம் தேவையே இல்லை.. வெள்ளியை வைத்து கூட கடன் வாங்க முடியுமாம்! ரிசர்வ் வங்கி புதிய ரூல்ஸ்!
சென்னை: நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி இப்போது புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. புதிய ரூல்ஸின்படி இனி மேல் தங்கத்தை போலவே வெள்ளியும் வைத்து விரைவில் கடன் வாங்க முடியும்.. அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த ரூல்ஸ் அமலுக்கு வரும் நிலையில், புதிய விதியில் எவ்வளவு கடன் பெறலாம்.. இதற்கான உச்சவரம்பு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
நமது நாட்டில் பெரும்பாலான மக்களுக்குத் தங்கம் மட்டுமே பிரதானச் சேமிப்பாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் தங்கத்தை வைத்தே கடன் வாங்குகிறார்கள். அதேநேரம் கடந்த சில காலமாக வெள்ளி விலையும் உச்சத்திற்குப் போய்விட்ட நிலையில், பொதுமக்கள் பலரும் வெள்ளியை வாங்க ஆரம்பித்துள்ளனர்.

புதிய ரூல்ஸ்கள்
இதற்கிடையே நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி சில புதிய ரூல்ஸ்களை வெளியிட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களின் மீதான கடன்களுக்கு ஒரு சீரான நடைமுறையைக் கொண்டு வர ரிசர்வ் வங்கி இந்த விதிகளை வகுத்துள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த விதிகள் அமலுக்கு வரும் சூழலில், வங்கிகள், NBFCகள், கூட்டுறவு வங்கிகள் என அனைத்துக்கும் இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
கடந்த ஜூன் 6ம் தேதி முதலில் இந்தச் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. கடன் வாங்குவோரின் பாதுகாப்பை மேம்படுத்தவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டிருந்தது. மேலும், கடன் வழங்குவோர் பொறுப்புடன் நடந்து கொள்வதையும் இது உறுதி செய்வதாக இருந்தது.
வெள்ளிக்கும் கடன் கிடைக்கும்
முதலில் தங்கத்திற்கு மட்டுமே வங்கிகள் கடன் கொடுத்து வந்த நிலையில், புதிய ரூல்ஸின் கீழ் தங்கத்துடன் சேர்த்து வெள்ளிக்கும் கடன் கொடுக்கலாம். நகைகள், ஆபரணங்கள் அல்லது காயின்கள்களுக்கு கடன் கொடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது..
ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள தங்கம்/ வெள்ளியை மறு அடமானம் வைக்கவோ, அதன் மீது மீண்டும் கடன் பெறவோ முடியாது. மேலும், ஒருவர் தங்கம், வெள்ளி அல்லது தங்கப் பத்திரங்களை (ETF போன்றவை) வாங்குவதற்காகக் கடன் பெறவும் அனுமதிக்கப்படாது.
எவ்வளவு கடன் கிடைக்கும்
முன்பு நகைகளின் மதிப்பில் 75% வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. இப்போது அதை மாற்றி 85% வரை கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வட்டியுடன் சேர்த்து, மொத்தக் கடன் தொகை ₹2.5 லட்சம் வரை இருந்தால் இந்த உச்சவரம்பு பொருந்தும். உதாரணமாக, ஒருவரின் தங்கத்தின் மதிப்பு ₹1 லட்சம் எனில், இப்போதுள்ள விதிகளின்படி 75,000 வரை கடன் பெற முடியும். புதிய ரூல்ஸ் கீழ் ரூ.85,000 வரை கடன் பெறலாம்.
உச்சவரம்பு
கடனையும் வட்டியையும் நிச்சயம் 12 மாதங்களுக்குத் திரும்பச் செலுத்த வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒருவர் எவ்வளவு தூரம் தங்கம், வெள்ளி உலோகங்களை வைத்து கடன் பெறலாம் என்பதற்கும் உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளியை வைத்து கடன் பெறலாம் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
- தங்க நகைகள்: 1 கிலோ வரை
- தங்க நாணயங்கள்: 50 கிராம் வரை
- வெள்ளி நகைகள்: 10 கிலோ வரை
- வெள்ளி நாணயங்கள்: 500 கிராம் வரை கடனாக பெறலாம்.
இது ஒருவர் வாங்கும் அதிகபட்ச கடனாகும். அதாவது ஒருவர் பல வங்கிகளில் நகைக்கடன் பெற்றிருந்தாலும், அதைச் சேர்த்தால் இந்த உச்சவரம்பைத் தாண்டக்கூடாது என்பதை விதியாகும்.
மற்ற ரூல்ஸ் என்ன
ஒருவர் வட்டியையும் அசலையும் திரும்பச் செலுத்திவிட்டால் வங்கிகள் அதிகபட்சம் 7 வேலை நாட்களுக்குள் அடமானம் வைக்கப்பட்ட தங்கம் அல்லது வெள்ளியைத் திருப்பித் தர வேண்டும். தாமதம் ஏற்பட்டால், ஒரு நாளுக்கு ₹5,000 இழப்பீடாகக் கடன் வாங்கியவருக்குச் செலுத்த வேண்டும். அடகு வைத்திருந்த போது இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால் வங்கிகளே முழு இழப்பீட்டையும் கடன் வாங்கியவருக்கு வழங்க வேண்டும்.












Click it and Unblock the Notifications